பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் அவரது நம்பிக்கை அதிகரித்திருக்கும் என்று பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.
கடந்த அக்டோபர் 23-ஆம் தேதி இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடையே நடைபெற்ற டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.
முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 159 ரன்கள் எடுத்தது. இதனால் 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரன்கள் எதுவும் எடுக்காமல் சொதப்பினர்.
இதனால் 6 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 31 ரன்கள் மட்டுமே எடுத்து இந்திய அணி திணறியது.
பின்னர் களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா, விராட் கோலி கூட்டணி அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதனால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 160 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது.
இந்த ஆண்டு துவக்கத்தில் விராட் கோலி சிறப்பாக பேட்டிங் செய்யவில்லை. இதனால் அவர் விமர்சிக்கப்பட்டார்.
ஆனால், ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் விராட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி விளையாடிய போது, பழைய கோலியை பார்க்க முடிந்ததாக அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் விராட் கோலியின் பேட்டிங்கை பாராட்டியுள்ளார். விராட் கோலியின் அதிரடியான ஆட்டம் மிகுந்த தன்னம்பிக்கையை தருவதாகவும், வீரர்களின் மனநிலையை உயர்த்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாபர் அசாம் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போது, “விராட் கோலி முன்பு பேட்டிங் செய்வதில் போராடிக்கொண்டிருந்தார். தற்போது மீண்டு வந்துள்ளார். எங்களுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் அவரது தன்னம்பிக்கை அதிகரித்திருக்கும்.
உங்கள் அணிக்காக இதுபோன்ற போட்டிகளில் வெற்றி பெறும்போது, உங்களுக்கு அதிக நம்பிக்கை கிடைக்கும். உங்கள் மன நிலையும் அதிகரிக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
செல்வம்