பாகிஸ்தான் கேப்டன் பதவியிலிருந்து பாபர் அசாம் விலகல்!

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெளியேறியதை தொடர்ந்து அனைத்து வடிவங்களிலான கேப்டன் பதவியிலிருந்து பாபர் அசாம் இன்று (நவம்பர் 15) விலகியுள்ளார்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 9 போட்டிகளில் விளையாடிய பாகிஸ்தான் அணி 4 போட்டிகளில் வெற்றியும், 5 போட்டிகளில் தோல்வியும் அடைந்தது. இதனால் அரை இறுதி போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்திருந்தது.

உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி வெளியேறியதை தொடர்ந்து முன்னாள் வீரர்கள் பலரும் கேப்டன் பாபர் அசாமுக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தனர். இந்தநிலையில் பாபர் அசாம் அனைத்து வடிவங்களிலான கிரிக்கெட் போட்டி கேப்டன் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “2019-ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணியை வழிநடத்த கிரிக்கெட் வாரியத்திடமிருந்து எனக்கு அழைப்பு வந்த தருணம் தெளிவாக நினைவிருக்கிறது. இந்த நான்கு ஆண்டுகளில் களத்திற்கும் உள்ளேயும் வெளியேயும் பல உயர்வு தாழ்வுகளை நான் அனுபவித்திருக்கிறேன். ஆனால் உலக கிரிக்கெட் அரங்கில் பாகிஸ்தானை பெருமையாகவும், மரியாதையாகவும் நிலைநிறுத்துவதை நோக்கமாக கொண்டிருந்தேன்.

வீரர்கள், பயிற்சியாளர்கள், நிர்வாகத்தின் கூட்டு முயற்சியால் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி நம்பர் 1 என்ற இடத்தை எட்டியது. எனது பயணத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களின் ஆதரவிற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

அனைத்து வடிவங்களிலான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் இன்று முதல் பாகிஸ்தான் கேப்டன் பதவியிலிருந்து விலகுகிறேன். இது கடினமான முடிவு. ஆனால் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதற்கு இது சரியான தருணம் என்று நினைக்கிறேன்.

பாகிஸ்தான் அணிக்காக அனைத்து வடிவங்களான போட்டிகளிலும் தொடர்ந்து விளையாடுவேன். எனது அனுபவம் மற்றும் அர்ப்பணிப்பால் புதிய கேப்டன் மற்றும் அணிக்கு ஆதரவளிப்பேன். கேப்டன் பொறுப்பை வழங்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு!

ஓபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கு நாளை ஒத்திவைப்பு!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts