பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் கேப்டனாக மிகப்பெரிய பூஜ்ஜியம். தவிர, இந்தியாவின் விராட் கோலியுடன் அவரை ஒப்பிடாதீர்கள் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தன்னுடைய யூடியூப் சேனலில், “பாபர் அசாமை விராட் கோலியுடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள். அவ்வாறு பேசுவதை நிறுத்த வேண்டும். விராட்கோலி, ரோகித் சர்மா போன்றவர்கள் மிகப் பெரிய வீரர்கள். பாகிஸ்தான் அணியில் விராட் மற்றும் ரோகித்துடன் ஒப்பிடக்கூடிய அளவுக்கு எவரும் இல்லை.
பாபர் அசாம் கேப்டனாக மிகப் பெரிய பூஜ்ஜியமாக உள்ளார். அவர் அணியை வழிநடத்துவதற்கு தகுதியானவர் அல்ல. குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அணியை வழிநடத்த அவருக்கு திறன் இல்லை. இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரின்போது பென் ஸ்டோக்ஸ் மற்றும் மெக்கல்லம் ஆகியோரிடம் இருந்து கேப்டன் பதவியை கற்றுக்கொள்ள நல்ல வாய்ப்பு இருந்தது.
இல்லையெனில் அவர் தனது ஈகோவை விட்டுவிட்டு சர்பராஸ் அகமதுவிடம் கேப்டன் பதவி எப்படி செய்ய வேண்டும் என கேட்டிருக்கலாம். இது பாகிஸ்தான் டெஸ்ட் வரலாற்றில் மிகப் பெரிய கருப்பு புள்ளியாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம், இந்தியாவின் கௌதம் கம்பீர் போன்ற முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பாபர் அசாம் ஒரு சுயநலமான கேப்டன் என்று வெளிப்படையாகவே விமர்சித்து வருகிறார்கள். அவர்களைத் தொடர்ந்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியாவும் பாபர் அசாமை விமர்சித்து வருகிறார்.
’அணியின் நலன் கருதி சுயநலமாக எப்படி நடந்து கொள்ளக்கூடாது என்பதை இந்தியாவின் விராட் கோலியைப் பார்த்து அவர் கற்றுக்கொள்ள வேண்டும்’ என சமீபத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி தோல்வியுற்றபோது தெரிவித்திருந்தார்.
அப்போது அவர் தன்னுடைய யூடியூப் சேனலில், ’பிடிவாத குணத்துடன் பெரும்பாலான போட்டிகளில் மெதுவாக விளையாடும் அசாமால் பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய தீங்குதான் நடந்தேறி வருகிறது” எனத் தெரிவித்திருந்தார்.
தற்போது, பாபர் அசாம் மீது இந்த விமர்சனங்கள் எழுவதற்குக் காரணம், இங்கிலாந்து அணியிடம் 3-0 என்ற புள்ளிக்கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்ததுதான். அதிலும், இந்தத் தொடர் பாகிஸ்தான் மண்ணில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெ.பிரகாஷ்
மா.செ. கூட்டம்: பன்னீருக்கு போட்டியாய் எடப்பாடியும் அறிவிப்பு!