இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 87 ரன்கள் குவித்ததன் மூலம் டி20 போட்டிகளில் அதிவேகமாக 3 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை பாபர் அசாம் சமன் செய்துள்ளார்.
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 7 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதுவரை நடந்த 5 போட்டிகளில் பாகிஸ்தான் அணி 3-2 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
இந்நிலையில் நேற்று இரவு லாகூரில் உள்ள கடாஃபி ஸ்டேடியத்தில் 6வது டி20 போட்டி நடைபெற்றது.
முதலில் ஆடிய பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம் (87*) தவிர யாரும் சிறப்பாக ஆடவில்லை.
இதனால் பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் குவித்தது.
தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி, தொடக்கவீரர் பிலிப் சால்ட்டின் அபாரமான ஆட்டத்தால் 14.3 ஓவரில் 170 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.
இதன் மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து அணி தொடரை 3 – 3 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.
கோலியின் சாதனை சமன்!
எனினும் இந்த ஆட்டத்தின் மூலம் பாகிஸ்தான் கேப்டன் சர்வதேச அரங்கில் முக்கியமான சாதனையை படைத்தார்.
இந்த போட்டியில் 87 ரன்கள் அடித்ததன் மூலம் பாபர் அசாம் சர்வதேச டி20 போட்டிகளில் 3 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார்.
இதன் மூலம் டி20 போட்டிகளில் அதிவேகமாக 3 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை பாபர் அசாம் சமன் செய்துள்ளார்.
கோலி மற்றும் அசாம் இருவரும் இந்த சாதனையை தங்களின் 81-வது டி20 இன்னிங்சில் படைத்துள்ளனர்.
இவர்களுக்கு அடுத்தபடியாக மார்ட்டின் கப்டில் (101 இன்னிங்ஸ்) ரோஹித் சர்மா (108 இன்னிங்ஸ்) உள்ளனர்.
டி20 உலககோப்பையில் அதிக சதம்!
உலக கிரிக்கெட் அரங்கில் சிறந்த வீரராக உள்ள பாபர் அசாம் அடுத்தடுத்து கோலியின் சாதனைகளை நெருங்கி வருகிறார்.
கடந்த ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக ஆடிய பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் அரைசதம் (66) அடித்தார். அந்த தொடரில் பாபர் அசாம் அடித்த 4வது அரைசதம் அது.
அதன் மூலம் ஒரே டி20 உலகக் கோப்பை தொடரில் 4 அரைசதம் அடித்த விராட் கோலி மற்றும் மேத்யூ ஹெய்டனின் டி20 உலகக் கோப்பை சாதனையை அப்போது பாபர் அசாம் சமன் செய்தது குறிப்பிடத்தக்கது.
அதிவேக 10000 ரன்கள்!
அதே போல் கடந்த ஜுலை மாதம் நடந்த இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 119 ரன்கள் குவித்தார். அதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 10,000 ரன்களை கடந்த ஆசிய பேட்ஸ்மேன் என்ற விராட் கோலியின் ஆல்-டைம் சாதனையை முறியடித்தார்.
10,000 ரன்களை விராட் கோலி 232வது இன்னிங்ஸில் கடந்திருந்தார். ஆனால் 228 இன்னிங்ஸில் விளையாடிய பாபர் அசாம் அந்த சாதனையை முறியடித்தார்.
இதன்மூலம் இந்திய அணி வீரர் விராட் கோலியின் சாதனைகளை குறிவைத்து, பாபர் அசாம் விளையாடி வருகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
பாகிஸ்தான் வெற்றியை புரட்டி போட்ட பிலிப் சால்ட்
அமைச்சர் மெய்யநாதனுக்கு திடீர் உடல்நலக்குறைவு!