ஆரோன் பிஞ்ச் தனது 146வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியை நாளை நியூசிலாந்துக்கு எதிராக விளையாட உள்ளார்.
2013ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான ஆரோன் பிஞ்ச் இதுவரை 145 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். 17 சதங்கள், 30 அரை சதங்கள் உள்பட 5,401 ரன்கள் எடுத்துள்ளார்.
2023 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சர்வதேச உலக கோப்பை போட்டிகளில் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி பங்குபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான ஆரோன் பிஞ்ச் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

தனது ஓய்வு பற்றி அவர் கூறுகையில், “2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சர்வதேச உலக கோப்பைக்கு தயாராகி வெற்றி பெற ஒரு புதிய கேப்டனுக்கு சிறந்த வாய்ப்பை வழங்குவதற்கான நேரம் இது” என்று கூறியுள்ளார்.
மேலும் , “நம்பமுடியாத நினைவுகளுடன் இது ஒரு அற்புதமான நாட்கள். இந்த நிலைக்கு எனது பயணத்திற்கு உதவிய மற்றும் ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி கூறுகிறேன்.” என்றும் கூறியுள்ளார்.

“ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாகவும், 50 ஓவர் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய ஆரோனின் பெரும் பங்களிப்பிற்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைமை நிர்வாக அதிகாரி நிக் ஹாக்லி கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்