ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதில், முதல் இரண்டு போட்டிகளிலும் அபாரமாக வென்ற இந்தியா 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இந்த நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி குஜராத்தில் உள்ள ராஜ்கோட் செளராஷ்டிரா மைதானத்தில் நேற்று (செப்டம்பர் 28) நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
ஆரம்பம் முதலே இந்தியாவின் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஆஸ்திரேலிய அணியின் முதல் நான்கு பேட்ஸ்மேன்களான வார்னர் (56), மிட்செல் மார்ஷ் (96), ஸ்டீவன் ஸ்மித் (74) லபுசனே (72) ஆகியோர் அரைசதம் அடித்து அசத்தினர்.
குறிப்பாக 13 பவுண்டரி, 3 சிக்ஸர் என அதிரடியாக ஆடிய மிட்செல் மார்ஷ் 4 ரன்களில் சதத்தை தவறவிட்டு ஏமாற்றத்துடன் வெளியேறினார்.
ஆஸ்திரேலிய அணி நிச்சயம் 400 ரன்களை கடந்துவிடும் என எதிர்பார்த்த நிலையில், அந்த அணியின் பின்வரிசை வீரர்கள் சொதப்பினர்.
இதனால் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் மட்டுமே அடித்தது.
தொடர்ந்து விளையாடிய இந்திய அணியில் ஆச்சரியம் அளிக்கும் விதமாக தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், தமிழ்நாட்டு வீரர் வாஷிங்டன் சுந்தரும் களமிறங்கினர்.
முதல் விக்கெட்டுக்கு 74 ரன்கள் குவித்த இந்த ஜோடியை வாஷிங்டன் சுந்தரை (18) ஆட்மிழக்க செய்து பிரித்தார் மேக்ஸ்வெல். அதன்பிறகு இந்திய அணியில் ரோகித் ஷர்மா 81, விராட் கோலி 56, ஷ்ரேயஸ் ஐயர் 48, ரவீந்திர ஜடேஜா 35 ஆகியோர் மட்டுமே பெரிய ஸ்கோரை பதிவு செய்தனர்.
பின்னர் களமிறங்கிய மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி 49.4 ஓவர்கள் முடிவில் 286/10 ரன்களை எடுத்து, 66 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
கடைசி போட்டியில் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்றாலும் 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிய இந்தியா கோப்பையை வென்றது.
இதனைத்தொடந்து இரு அணிகளும் உலகக்கோப்பை ஒருநாள் தொடரில் வரும் அக்டோபர் 8ஆம் தேதி மோத உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா
Leo Das is a “BADASS” – சர்ப்ரைஸ் மாஸ் ப்ரோமோ!!
அரசு அலுவலகங்களில் சைகை மொழிபெயர்ப்பாளர்களை நியமிக்க ஆர்ப்பாட்டம்!