ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில் செர்பியா வீரர் ஜோகோவிச் வெற்றி பெற்று 10 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கிப் பரபரப்பாகப் பல சுற்றுகளைக் கடந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியில் இறுதி போட்டிகள் இன்று நடைபெற்றது.
ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதி போட்டியில் செர்பியா நாட்டைச் சேர்ந்த ஜோகோவிச், கிரீஸ் நாட்டை சேர்ந்த சிட்சிபாஸுடன் மோதினார். இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் மோதியதால் இன்றைய ஆட்டம் பரபரப்பாக நடைபெற்றது.
இந்த போட்டியில் 6-3, 7-6(4) 7-6 (5) என்ற செட் கணக்கில் ஸ்டீபனோஸ் சிட் சிபாஸை வென்று சாம்பியன் பட்டத்தை ஜோகோவிச் கைப்பற்றினார்.

இன்றைய போட்டியில் வென்று சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் ஜோகோவிச் 10வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
கிராண்ட்ஸ்லாம் என்ற அளவில் இந்த வெற்றியின் மூலம் அவருக்கு இது 22ஆவது பட்டமாகும். இதன் மூலம் ரஃபேல் நடாலின் சாதனையைச் சமன் செய்திருக்கிறார் ஜோகோவிச்.
ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவின் ரிங்கி ஹிஜிகடா – ஜேசன் குப்லெர் இணை மொனாக்கோவின் ஹியூகோ நைஸ் மற்றும் போலந்து நாட்டின் ஜான் ஜெலன்ஸ்கி இணையுடன் மோதியது.
இந்த போட்டியில் 6-4, 7-6 என்ற நேர் செட் கணக்கில் ஹியூகோ – ஜான் ஜெலன்ஸ்கியை வீழ்த்தி ஆஸ்திரேலிய இணையான ரிங்கி – குப்லெர் சாம்பியன் பட்டத்தை வென்றனர்.

மகளிர் இரட்டையர் பிரிவில், நடப்பு சாம்பியனான பார்போரா கிரெஜ் சிகோவா – கேட்ரினா சினியாகோவா இணை மீண்டும் சாம்பியன் பட்டத்தை வென்று பாராட்டைப் பெற்றது.

ஜப்பானை சேர்ந்த ஷுகோ அவ்யோமா – ஈனா ஷிபாரா ஜோடியை 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி செக் குடியரசு வீராங்கனைகள் மீண்டும் பட்டத்தைக் கைப்பற்றினர்.

நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் பெலாரஸ் நாட்டை சேர்ந்த அரினா சபலெங்கா முதன்முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா
இலவச வேட்டி சேலை: பன்னீரை கண்டித்த அமைச்சர் காந்தி
பிபிசி ஆவணப்படம்: கேரள ஆளுநர் கேள்வி!