இந்திய அணியின் ஜடேஜா – அஸ்வின் சுழற்பந்துவீச்சு கூட்டணியை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்ஸில் 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.
இந்தியா -ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் 4 டெஸ்ட் போட்டிகள் இன்று முதல் நடைபெற உள்ளன.
அதன்படி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் அசோசியேசன் மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி பலத்த எதிர்ப்பார்ப்புக்கு இடையே இன்று (பிப்ரவரி 9) தொடங்கியது.
இந்திய அணியின் சார்பில் கடந்த 2 ஆண்டுகளாக குறைந்த ஓவர்களில் அதிரடி காட்டி வரும் சூர்யகுமார் யாதவ் மற்றும் விக்கெட் கீப்பர் கே.எஸ்.பரத் ஆகியோர் அறிமுக வீரராக களம் இறங்கினர்.
மேலும் கால் முட்டியில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்ட ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்தார். அவருடன் ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் பட்டேல் என இந்திய அணி 3 சுழற் பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியுள்ளது.
ஆரம்பமே அதிரடி தாக்குதல்
டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணிக்கு ஆரம்பமே சோதனையாக அமைந்தது.
அந்த அணியின் தொடக்க வீரர்களான வார்னரும், கவாஜாவும் தலா 1 ரன்களில் முகமது ஷமி மற்றும் முகமது சிராஜின் வேகப்பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இதனால் அதிர்ச்சியில் உறைந்த ஆஸ்திரேலிய அணிக்கு அடுத்து வந்த ஸ்மித்தும், லபுஷேனும் நிதானமாக ஆடி ஆறுதல் அளித்ததுடன் சரிவில் இருந்தும் அணியை மீட்க போராடினர்.
கூட்டணியை பிரித்த ஜடேஜா
உணவு இடைவேளைக்கு சிறிது நேரம் முன்பு வரை தாக்குபிடித்த இந்த ஜோடியை ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா பிரித்தார்.
அரைசதம் நோக்கி நகர்ந்து வந்த லபுஷேனை 49 ரன்களிலும், ஸ்டீவன் ஸ்மித்தை 37 ரன்களிலும், ரென்ஷாவை டக் அவுட்டாகவும் ஜடேஜா அடுத்தடுத்து வெளியேற்றினார்.
அஸ்வின் சாதனை
மற்றொரு ஆல்ரவுண்டர் அஸ்வின், சிறப்பாக ஆடி வந்த அலெக்ஸ் கேரியை (36) கிளீன் போல்டாக்கி வெளியேற்றினார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் அரங்கில் அதிவேகமாக 450 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் என்று சாதனை படைத்தார்.
இதனைத்தொடர்ந்து இருவரும் தங்களது மாயஜால சுழலில் மீதமிருந்த வீரர்களையும் சொற்ப ரன்களுக்கு வீழ்த்தினர். இதனால் ஆஸ்திரேலியே அணி தனது முதல் இன்னிங்ஸில் 63.5 ஓவர்களில் 177ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
ஜடேஜா 5 விக்கெட்டுகள்
இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 5விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேபோல் ரவிச்சந்திரன் அஸ்வின் 3விக்கெட்டுகளையும், முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தலா 1விக்கெட்டையும் கைப்பற்றி உள்ளனர்.
குறைவான ரன்களில் ஆஸ்திரேலிய அணியை சுருட்டிய கையோடு, இந்திய அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் முதல் இன்னிங்ஸை தொடங்கியுள்ளனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
பார்டர் கவாஸ்கர் டிராபி : ஆல்ரவுண்டர் அஸ்வின் அபார சாதனை!
வாரிசு படத்தின் வெற்றி மகிழ்ச்சியை கொடுத்தது: கணேஷ் வெங்கட் ராம்