இங்கிலாந்திற்கு எதிரான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆஷஸ் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணியை சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது இங்கிலாந்து. எட்ஜ்பஸ்தன் கிரிக்கெட் மைதானத்தில் ஜூன் 16ஆம் தேதி துவங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 393 ரன்கள் குவித்து முதல் நாளிலேயே டிக்ளர் செய்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. இங்கிலாந்திற்கு ஆஸ்திரேலியா மொத்தம் 78 ஓவர்கள் பந்து வீசியது.
இங்கிலாந்தின் நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட் சதமடித்து 118 ரன்களும் ஜாக் கிராவ்லி 61 ரன்களும் ஜானி பெஸ்ட் 78 ரன்களும் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக நேதன் லயன் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
இதையடுத்து பெரிய சவாலை எதிர்கொண்டு களமிறங்கிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 386 ரன்கள் மட்டுமே எடுத்தது. டேவிட் வார்னர் 9, லபுஸ்ஷேன் 0, ஸ்மித் 16 என முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை எடுக்க தவறிய நிலையில் டிராவிஸ் ஹெட் 50, கேமரூன் கிரீன் 38, அலெக்ஸ் கேரி 66, கேப்டன் கமின்ஸ் 38 என லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரன்களை சேர்த்து ஸ்கோரை உயர்த்தினர்.
அவர்களுடன் மறுபுறம் நங்கூரமாக நின்று சதமடித்து 141 ரன்கள் குவித்து, மிகப்பெரிய சவாலை கொடுத்த உஸ்மான் கவாஜாவை, வரலாறு காணாத ஃபீல்டிங்கை செட் செய்து அவுட்டாக்கி 7 ரன்கள் முன்னிலை பெற்றது இங்கிலாந்து.
ஆனால் 2வது இன்னிங்ஸிற்கு களமிறங்கிய இங்கிலாந்து நிதானத்தை வெளிப்படுத்தாமல் அதிரடியாக விளையாடியதால் 273 ரன்களிலே ஆல் அவுட்டானது.
அதிகபட்சமாக ஜோ ரூட் 46, ஹரி ப்ரூக் 46, கேப்டன் ஸ்டோக்ஸ் 43 என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கணிசமான ரன்களை எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக கேப்டன் கம்மின்ஸ் மற்றும் கேப்டன் லயன் ஆகியோர் தலா 4 விக்கெட்களை சாய்த்தனர்.
இதனையடுத்து 281 ரன்களை சேஸ் செய்து ஆஸ்திரேலியா களமிறங்கியது. டேவிட் வார்னர் 36, மார்னஸ் லபுஸ்ஷேன் 13, ஸ்டீவ் ஸ்மித் 6 என முக்கிய வீரர்கள் குறைந்த ரன்களில் பெவிலியன் திருப்பி ஏமாற்றத்தைக் கொடுத்தனர்.
இதனால் கடைசி நாள் ஆட்டத்தில் 174 ரன்கள் தேவைப்பட்ட போது ஆஸ்திரேலியாவுக்கு மீண்டும் உஸ்மான் கவாஜா நம்பிக்கையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
எதிர்புறம் ஸ்காட் போலண்ட் 20, டிராவிஸ் ஹெட் 16, கேமரூன் க்ரீன் 28 என அடுத்து வந்த வீரர்களை சொற்ப ரன்களில் இங்கிலாந்து அவுட்டாக்கியது. குறிப்பாக அரை சதமடித்து போராடிய கவாஜாவை 65 ரன்களில் கேப்டன் ஸ்டோக்ஸ் அவுட்டாக்கினார். இதனால் எதிர்பார்ப்பு அதிகரித்தது.
மறுபுறம் சவாலை கொடுக்க முயற்சித்த அலெக்ஸ் கேரி 20 ரன்களில் ஜோ ரூட் சுழலில் அவரிடமே கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.
இதனால் வெற்றிக்கு 54 ரன்கள் தேவை என்ற நிலையில் ஆஸ்திரேலியாவிடம் 2 விக்கெட்டுகள் மட்டுமே இருந்தது. எனவே கேப்டன் பட் கமின்ஸ் நிதானமாகவும், அதிரடியாகவும் விளையாடி வெற்றிக்குப் போராடினார். கமின்ஸ் உடன் இணைந்து நாதன் லயன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதன் காரணமாக கடைசி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் இங்கிலாந்து திணறியது. இங்கிலாந்து அணியின் பதட்டத்தை பயன்படுத்திக் கொண்டு கமின்ஸ் 4 பவுண்டரி 2 சிக்சருடன் 44 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியாவை 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற வைத்தார்.
பரபரப்பான ஆட்டத்தில் த்ரில் வெற்றி பெற்று உலக சாம்பியன் என்பதை ஆஸ்திரேலியா நிரூபித்துள்ளது.
மோனிஷா
அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கில் அமலாக்கத் துறையின் அதிரடி மூவ்… அதிர்ச்சியில் அமைச்சர்கள்!
நாட்டுப்புற கலைஞர்களுக்கு சிறப்புக் கடன் திட்டம்!
