சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து திடீர் ஓய்வை அறிவித்த அதிரடி ஆட்டக்காரர்
ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஆரோன் பின்ச் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா அணியின் கேப்டனும் அதிரடி ஆட்டக்காரராகவும் இருப்பவர் ஆரோன் பின்ச். இவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர், ”ஆஸ்திரேலிய அணிக்கு அடுத்த டி20 தொடர் ஆகஸ்ட் மாதத்தில்தான் இருக்கிறது. மேலும், 2024ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் நான் பங்கேற்க வாய்ப்பு மிக மிக குறைவு என்பதால், டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன். பிக்பாஷ் போன்ற உள்ளூர் டி20 லீக் தொடர்களில் நிச்சயம் விளையாடுவேன்” என்று தெரிவித்துள்ளார்.
ஆரோன் பின்ச் யாரும் எதிர்பாராத விதமாக ஓய்வை அறிவித்தது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
36 வயதாகும் ஆரோன் பின்ச் ஆஸ்திரேலியா அணிக்காக 254 சர்வதேச போட்டிகளில் இதுவரை விளையாடியுள்ளார். இதில், 146 ஒருநாள் போட்டிகள், 103 டி 20 போட்டிகள், 5 டெஸ்ட் போட்டிகள் அடங்கும். மேலும் அவர் ஆஸ்திரேலிய அணியை 76 டி 20 மற்றும் 55 ஒருநாள் போட்டிகளில் வழி நடத்தி உள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்காக டி20 கிரிக்கெட்டில் 34.28 சராசரி, 142.53 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 3,120 ரன்களை அடித்திருக்கிறார். 2018-ஆம் ஆண்டில், ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு டி20 போட்டியில் 172 ரன்களை குவித்து அசத்தியதோடு, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் அடித்தவர் என்ற உலக சாதனையையும் படைத்துள்ளார்.
அதுமட்டுமல்ல, 2013ஆம் ஆண்டில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 156 ரன்களை குவித்தார். இன்று வரை ஆரோன் பின்சை தவிர டி20 கிரிக்கெட்டில் எந்த வீரரும் இரண்டு முறை 150-க்கும் அதிகமான ரன்களை அடித்ததில்லை என்ற பெருமைக்கும் சொந்தக்காரராக இருக்கிறார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் டாஸ் வெல்லும் அணி வெற்றி பெறும் என்ற நிலையில் அனைத்து போட்டிகளிலும் டாஸ் வென்று ஆஸ்திரேலியா அணிக்காகக் கோப்பையை வென்று கொடுத்தார் ஆரோன் பின்ச்.
தொடர்ந்து சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில், ஆஸ்திரேலியா அணி அரையிறுதிக்குக் கூட முன்னேறாமல் தொடரை விட்டு வெளியேறியது. அந்த தொடரில் ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் கேப்டனாக செயல்பட்ட ஆரோன் பின்ச் காயம் காரணமாக விலகினார். இதனால் ஆஸ்திரேலியா அணியை மேத்யூ வேட் வழிநடத்தினார்.
கேப்டனாக செயல்பட்டு வந்த ஆரோன் பின்ச் ஓய்வை அறிவித்த நிலையில் அணியின் அடுத்த கேப்டனை தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் ஆஸ்திரேலியா அணிக்கு இருக்கின்றது. அடுத்த கேப்டன் ரேசில், பாட் கம்மின்ஸ், ஸ்டீவன் ஸ்மித், மேத்யூ வேட் ஆகியோர் இருக்கின்றனர்.
மோனிஷா
அதானி விவகாரம்: இரண்டாவது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்!
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார் விக்டோரியா கௌரி