தாங்கள் விளையாடிய முதல் 2 போட்டிகளுமே தோல்வியடைந்த நிலையில், 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 14வது லீக் போட்டியில், ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் முதல் வெற்றியை நோக்கி விளையாடின.
இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் குஷல் மெண்டீஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்த போட்டியில், காயத்தால் தொடரில் இருந்து வெளியேறிய இலங்கை அணியின் கேப்டன் தசுன் சனகாவிற்கு பதில் சமிகா கருணரத்னே. அதேபோல, மதீஸா பதிரானாவுக்கு பதில் லஹிரு குமாரா அணியில் இணைந்தார். மறுமுனையில், ஆஸ்திரேலியா அதே அணியுடன் களம் கண்டது.
ஏமாற்றிய இலங்கை மிடில் ஆர்டர்
முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணிக்கு, துவக்க ஆட்டக்காரர்கள் பதும் நிசங்கா மற்றும் குஷல் பெரேரா மிகசிறப்பான துவக்கம் அளித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 125 ரன்கள் சேர்த்து, ஆஸ்திரேலியா அணி மீது முழு ஆதிக்கத்தை செலுத்தியது.
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ், நிசங்காவை 61 ரன்களுக்கும், பெரேராவை 78 ரன்களுக்கும் வீழ்த்த, அடுத்து வந்தவர்களை அந்த ஆதிக்கத்தை தொடர தவறினர்.
வேகம் & சூழல் என ஆஸ்திரேலியாவின் 2 முனை தாக்குதலில் சிக்கி, சரித் அசலங்காவை (25 ரன்கள்) தவிர, அனைத்து இலங்கை அணி வீரர்களும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். இதனால், அந்த அணியால் 209 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. ஆஸ்திரேலிய அணிக்காக ஆடம் ஜாம்பா 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
அசத்திய மிட்சல் மார்ஷ் & ஜோஷ் இங்கிலிஸ்
210 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணிக்கு, இலங்கை அணி துவக்கத்திலேயே நெருக்கடி கொடுத்தது. ஆட்டத்தின் 4வது ஓவரிலேயே, டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் என 2 நட்சத்திர பேட்ஸ்மேன்களுக்கு ஆட்டமிழந்து ஃபெவிலியன் திரும்பினார்.
ஆனால், அடுத்து களமிறங்கிய மார்னஸ் லபுசானேவுடன் இணைந்து, மிட்சல் மார்ஷ் அந்த அணிக்கு தேவையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மார்ஷ் 52 ரன்களுக்கும், லபுசானே 40 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஜோஷ் இங்கிலிஸும் அந்த பொறுப்பான ஆட்டத்தை தொடர்ந்து அரைசதம் கடந்தார்.
பின் வந்த, கிளென் மேக்ஸ்வெல் மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் பந்துகளை சிக்ஸ்களுக்கு பறக்கவிட, ஆஸ்திரேலிய அணி 36வது ஓவரிலேயே இலக்கை எட்டியது. இலங்கை அணிக்காக சிறப்பாக பந்துவீசிய தில்சன் மதுசங்கா 2 மெய்டன் ஓவர்களுடன் 3 விக்கெட்களை கைப்பற்றியிருந்தார்.
இதன்மூலம், இந்த தொடரில் தனது முதல் வெற்றியை ஆஸ்திரேலியா பதிவு செய்து, புள்ளிப்பட்டியலில் 8வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. முன்னதாக, யாரும் எதிர்பார்க்க வண்ணம், ஆஸ்திரேலிய அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில், ஆஸ்திரேலிய அணிக்காக சிறப்பாக பந்துவீசி, 8 ஓவர்களில் ஒரு மெய்டன் ஓவருடன் 4 விக்கெட்களை வீழ்த்திய ஆடம் ஜாம்பா ‘ஆட்ட நாயகன்’ விருதை வென்றார்.
முரளி
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
பிக் பாஸ் சீசன் 7: மீண்டும் சதி திட்டம் தீட்டும் மாயா? எஸ்கேப் ஆன விஷ்ணு
விக்ரம் படத்தை இயக்கும் சித்தா பட இயக்குநர்!