Aus vs Sco: டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை படைத்த ஆஸ்திரேலியா

Published On:

| By Kavi

ஸ்காட்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி செப்டம்பர் 4 அன்று எடின்பர்க்கில் உள்ள கிரான்ஜ் கிரிக்கெட் கிளப் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில், முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்சல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதை தொடர்ந்து பேட்டிங் செய்ய களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி, துவக்கத்திலேயே தடுமாற்றத்தை சந்தித்தது. பின் ஆஸ்திரேலிய வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவேளையில் விக்கெட்களையும் பறிகொடுத்தது.

இருப்பினும், துவக்க ஆட்டக்காரர் ஜார்ஜ் முன்சே 22 ரன்கள், கேப்டன் ரிச்சி பேரிங்டன் 23 ரன்கள், விக்கெட் கீப்பர் மேத்யூ கிராஸ் 27 ரன்கள் சேர்க்க, 20 ஓவர்கள் முடிவில் ஸ்காட்லாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் சேர்த்தது. ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக சீன் அபோட் 3 விக்கெட்களை கைப்பற்றினார்.

அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, டிராவிஸ் ஹெட்டின் அதிரடியால் 155 ரன்கள் என்ற இலக்கை 9.4 ஓவர்களில் கடந்து சாதனை படைத்துள்ளது.

முதல் ஓவரிலேயே பிரஷர்-மெக்கர்க் விக்கெட்டை ஸ்காட்லாந்து கைப்பற்றினாலும், ருத்ர தாண்டவம் ஆடிய டிராவிஸ் ஹெட் பவர்-பிளே முடிவில் 22 பந்துகளில் 73 ரன்கள் விளாசினார். மறுபுறத்தில் கேப்டன் மிட்சல் மார்ஷ் 11 பந்துகளில் 39 ரன்கள் குவிக்க, பவர்-பிளே முடிவில் 113 ரன்களை சேர்த்தது.

இதன்மூலம், சர்வதேச டி20 போட்டிகளில், பவர்-பிளேவில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற புதிய உலக சாதனையை ஆஸ்திரேலியா பதிவு செய்துள்ளது.

இந்த போட்டியில், 5 சிக்ஸ், 12 ஃபோர் உட்பட 25 பந்துகளில் 80 ரன்கள் குவித்த டிராவிஸ் ஹெட், ‘ஆட்ட நாயகன்’ விருதை வென்றார்,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

– மகிழ்

கோலியா? தோனியா? அதிக வரிப் பணம் செலுத்தும் கிரிக்கெட் வீரர் யார்?

வேலைவாய்ப்பு : பெல் நிறுவனத்தில் பணி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel