இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டி பஞ்சாப் மாநிலத்தில் சபோ பதின்டா நகரிலுள்ள குருகாசி பல்கலையில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தமிழ்நாட்டில் இருந்து பாரதியார் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், அன்னை தெரசா பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகத்தை சேர்ந்த அணிகள் பங்கேற்றுள்ளன.
இன்று காலை சுமார் 10 மணிக்கு கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலை அணி பீகாரின் தர்பங்கா பல்கலைக்கழக அணியுடன் மோதியது. அப்போது, பீகார் வீராங்கனை ஒருவர் தமிழக வீராங்கனைகளிடத்தில் பவுல் ஆட்டம் ஆடியுள்ளார். பவுல் ஆட்டம் தொடர்பாக தமிழக வீராங்கனைகள் நடுவரிடம் புகார் அளித்துள்ளனர்.
இதனால், அந்த வீராங்கனை தமிழக வீராங்கனைகளை தாக்கியுள்ளார். நடுவரும் தமிழக வீராங்கனைகளை தாக்கியுள்ளார். தொடக்கத்தில் இருந்தே நடுவர் பீகார் அணிக்கு சாதகமாக புள்ளிகள் வழங்கி வந்தததே மோதல் ஏற்பட காரணம் என்கிறார்கள்.
நடுவருக்கு ஆதரவாக பீகார் தர்பங்கா பல்கலைக்கழக மாணவிகள் அங்கிருந்த சேர்களை வீசி தகராறில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் தமிழக அணியின் பயிற்சியாளரும் தாக்கப்பட்டுளளார். தமிழக கபடி அணியின் பயிற்சியாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு சூழல் உருவானது. தற்போது , போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அதிகாரிகள் பஞ்சாப் மாநில போலீஸ் அதிகாரிகள் மற்றும் போட்டி நடத்தும் பல்கலைக்கழக நிர்வாகிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.