இந்தோனேசியாவில் நடைபெற்ற கால்பந்து போட்டியின் போது ஏற்பட்ட வன்முறையில், 174 பேர் உயிரிழந்த சம்பவம் உலக விளையாட்டு அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. விளையாட்டு உலகில் இது கருப்பு தினமாக பார்க்கப்படுகிறது.
அக்டோபர் 1-ஆம் தேதி இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா பகுதியில் கான்ஞ்சுருகன் மைதானத்தில், அரேமா எஃப்சி மற்றும் பெர்சிபயா சுரபயா அணிகளுக்கிடையே நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியில்,
பெர்சிபயா அணியிடம் 3-2 என்ற புள்ளி கணக்கில் அரேமா அணி தோல்வி அடைந்தது.
இதனால் கடும் கோபமடைந்த அரேமா அணியின் ரசிகர்கள் கால்பந்தாட்ட மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்தனர்.
இதனால், அரேமா அணி ரசிகர்களுக்கும், பெர்சிபயா அணி ரசிகர்களுக்குமிடையே மைதானத்தில் கலவரம் மூண்டது.
இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் தங்களை தாக்கி கொண்டனர். மைதானத்தின் வெளியில் நிறுத்தப்பட்டிருந்த காவல்துறை வாகனங்களை அடித்து நொறுக்கினர்.
வன்முறையை கட்டுப்படுத்த இந்தோனேசிய போலீசார், கண்ணீர் புகை குண்டு வீசினர். இதனால் விளையாட்டு மைதானம் புகை மண்டலமானது.
ரசிகர்கள் விளையாட்டு மைதானத்தின் நுழைவு வாயிலை நோக்கி படையெடுக்க தொடங்கினர்.
அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக 174 பேர் உயிரிழந்தனர். 320-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடிய சூழல் உள்ளது.
இந்தோனேசியாவில் கால்பந்தாட்ட ரசிகர்களுக்கிடையே மோதல் ஏற்படுவது புதிது அல்ல.
1938ஆம் ஆண்டுக்கு பிறகு இந்தோனேசியா அணி ஃபிபா உலக கால்பந்து கோப்பை போட்டிக்கு தகுதி பெறவில்லை என்றாலும், அங்கு உள்ளூர் கால்பந்து போட்டிகள் மிகவும் பிரபலமானவை.
இந்தோனேசியாவில் கால்பந்தாட்ட கிளப்புகளுக்கிடையேயான மோதல் என்பது அதிகளவில் இருக்கும்.
வெறித்தனமான கால்பந்தாட்ட ரசிகர்களை கொண்ட இந்தோனேசியா மண், இதுபோன்ற பெருhம் உயிர்ச்சேதத்தை இதுவரை சந்தித்ததில்லை.
23 ஆண்டுகளாக தனது சொந்த மண்ணில் தோல்வியை சந்திக்காத அரேமா அணி, கான்ஞ்சுருகன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தனது பரம எதிரியான பெர்சிபயா அணியிடம் தோல்வி அடைந்தது அரேமா அணி ரசிகர்களை வன்முறையின் உச்சத்திற்கு அழைத்துச் சென்றது.
42 ஆயிரம் ரசிகர்கள் மைதானத்தில் அமர்ந்திருந்து பார்வையிட்ட இந்த போட்டியில் அசாதாரண சூழல் நிகழும் என்று போலீசார் முன்கூட்டியே கணிக்கத் தவறியது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
1964 பெரு – அர்ஜெண்டினா அணிகள் இடையே லிமா தேசிய விளையாட்டு மைதானத்தில் நடந்த கால்பந்தாட்ட போட்டியின் போது ஏற்பட்ட கலவரத்தில், 320 பேர் உயிரிழந்தனர்.
இது தான் கால்பந்தாட்ட போட்டியில் அதிக உயிரிழப்பு நடந்த நிகழ்வாக இன்று வரை பார்க்கப்படுகிறது.
அந்த வரிசையில் இந்தோனேசியா கால்பந்தாட்ட கலவரமும் இணைந்துள்ளது.
இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடா கால்பந்து மைதானத்தில் நடந்த வன்முறை குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
அடுத்த ஆண்டு 20 வயதுக்குட்பட்டோருக்கான பிஃபா உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டி, இந்தோனேசியாவில் நடக்க உள்ள நிலையில் இது போன்ற சம்பவம் நடந்தது உலக அரங்கில் கால்பந்தாட்ட விளையாட்டு வீரர்களிடம் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தியா-தென் ஆப்பிரிக்கா: டி20 தொடரில் 16 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!
கொட்டும் மழையில் பேசிய ராகுல் : காங்கிரஸில் புயல் வீசுமா?