ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியின் 5வது நாள் தொடக்கத்தில் இந்தியா 4 பதக்கங்களை வென்றுள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டி கடந்த 8-ம் தேதி முடிவடைந்ததைத் தொடர்ந்து தற்போது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. பாரா விளையாட்டுப் போட்டியிலும் இந்திய வீரர்கள் பதக்கங்களை குவித்து வருகின்றனர்.
நேற்று 4வது நாள் போட்டிகள் முடிவில் இந்தியா மொத்தமாக 18 தங்கம், 23 வெள்ளி, 41 வெண்கலம் என 82 பதக்கங்களை வென்று புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. தொடர்ந்து இன்று 5வது நாள் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்திய வில்வித்தை வீராங்கனை ஷீத்தல் தேவி இன்று நடைபெற்ற பெண்களுக்கான ’காம்பவுண்ட் ஓபன் ஈவன்ட்’ இறுதி போட்டியில் தங்கம் வென்றார். சிங்கப்பூரின் ஆலிம் நூர் சியாஹிதாவை தோற்கடித்து வரலாற்று சிறப்புமிக்க தங்கப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளார் ஷீத்தல் தேவி.
தொடர்ந்து ஆடவருக்கான 1,500 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில் இந்தியாவின் ராமன் சர்மா 4:20.80 நிமிடங்களில் போட்டி தூரத்தை கடந்து தங்கம் வென்றார். அதுமட்டுமின்றி புதிய ஆசிய சாதனையைப் படைத்துள்ளார்.
தொடர்ந்து ஆடவருக்கான ஒற்றையர் பேட்மிட்டன் பிரிவில் கிருஷ்ணா நாகர் ஹாங்காங் பேட்மிட்டன் வீரர் காய் மன் சூவை எதிர்த்து விளையாடி வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.
பெண்களுக்கான வட்டு எறிதல் போட்டியில் லட்சுமி 22.55 மீட்டர் தூரம் எறிந்து வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார்.
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியின் 5வது நாள் தொடக்கத்தில் இந்தியா 2 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் என 4 பதக்கங்களை வென்றுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா