சீனாவின் ஹங்சோ நகரில் நடைபெற்று வரும் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் நாளுக்கு நாள் இந்தியாவின் பதக்க எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
பதக்க வேட்டை மட்டுமின்றி ஒவ்வொரு நாளும் பல்வேறு சாதனைகளையும் இந்திய வீரர், வீராங்கனைகள் நிகழ்த்தி வருகின்றனர். குறிப்பாக ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் 8வது நாளான நேற்று ஒரே நாளில் மட்டும் இந்திய வீரர்கள் 3 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலம் என 15 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.
தொடர்ந்து 9வது நாள் போட்டிகளிலும் இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக இந்திய வீராங்கனை பி.டி.உஷாவின் 39 ஆண்டு கால தேசிய சாதனையைத் தமிழ்நாட்டைச் சேர்ந்த வித்யா ராம்ராஜ் சமன் செய்துள்ளார்.
இந்தியாவில் கிரிக்கெட் என்றால் சச்சின் எப்படியோ, ஒட்டப்பந்தயம் என்றால் ஆட்டோமெட்டிக்காக கேரளாவின் பி.டி.உஷா. கடந்த 1984ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடந்த 23வது ஒலிம்பிக் போட்டியில் தடகள போட்டிகளில், 400 மீ தடை தாண்டுதல் ஓட்ட பந்தயத்தில், இந்தியாவின் சார்பில் பங்கேற்றார்.
அந்த போட்டியில் பந்தய இலக்கை 55.42 வினாடிகளில் கடந்து 4வது இடத்தை பிடித்த பி.டி.உஷா, 0.01 வினாடி இடைவேளையில் வெண்கல பதக்கத்தை ருமேனிய வீராங்கனை கிறிஸ்டியானா கஜகருவிடம் பறிகொடுத்தார்.
இருப்பினும் பி.டி.உஷா கடந்த 55.42 வினாடிகள் என்பது இந்திய தேசிய சாதனையாக பதிவானது. அன்றிலிருந்து தொடர்ந்து 40 ஆண்டுகளாக பி.டி.உஷாவின் சாதனையை யாரும் முறியடிக்கவில்லை.
இந்நிலையில் தான் சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பி.டி.உஷாவின் சாதனையை சமன் செய்துள்ளார் வித்யா ராம்ராஜ். மேலும், 400 மீட்டர் தடை தாண்டுதல் இறுதிப் போட்டிக்கும் வித்யா ராம்ராஜ் தகுதி பெற்றுள்ளார்.
யார் இந்த வித்யா ராம்ராஜ்?
1998 ஆம் ஆண்டு 20 ஆம் தேதி கோவையில் ஆட்டோ ஓட்டுநரின் மகள்களாக பிறந்தவர்கள் தான் வித்யா, நித்யா என்ற இரட்டை சகோதரிகள்.
இருவரும் 7 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது அவர்களது தாயார் ஈரோட்டில் உள்ள பெண்கள் விளையாட்டுப் பள்ளியில் சேர்த்தார்.
அப்போது முதல் ஹாக்கி விளையாட்டில் ஆர்வம் செலுத்தி வந்த இருவரும் பின்னர் தடகள வீராங்கனைகளாக அசத்த தொடங்கினர். கொரோனாவிற்கு பிறகு நித்யா தனது குடும்பத்தோடு சென்னைக்கு வந்து விட்டார்.
2017 ஆம் ஆண்டு வரை 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்று வந்த வித்யா பின்னர் 400 மீட்டர் தடைகள் தாண்டுதல் போட்டியில் கவனம் செலுத்த தொடங்கினார். தடைகள் தாண்டுவதோடு 400 மீ ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்கும் வகையில் வித்யாவின் பயிற்சியாளர் பயிற்சி கொடுத்தார். தற்போது வித்யா 400 மீட்டர் தடைகள் தாண்டுதல் மற்றும் ஓட்டப்பந்தயம், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.
குறிப்பாக கடந்த ஒரு வருட காலமாக வித்யா 400 மீட்டர் தடைகள் தாண்டுதலில் தனது தனித்திறனை உயர்த்தி வருகிறார். 2022 ஆம் ஆண்டு அக்டோபரில் நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டியில் வித்யா 56.57 வினாடிகளை வெற்றி பெற்றார்.
ஜூன் 2023-ல் மாநிலங்களுக்கு இடையேயான சாம்பியன்ஷிப் போட்டியில் பந்தய நேரத்தை 56.01 வினாடிகளில் கடந்திருந்தார். தொடர்ந்து கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி சண்டிகரில் நடைபெற்ற இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் தடகளப் போட்டியில், 400 மீ தடைகள் தாண்டுதல் பிரிவில், இலக்கை 55.43 வினாடிகளில் கடந்த வித்யா ராம்ராஜ், பி.டி.உஷாவின் சாதனையை நெருங்கி இருந்தார். வெறும் 0.01 வினாடி நேர இடைவெளியில் பி.டி.உஷாவின் சாதனையை சமன் செய்ய முடியாமல் தவறவிட்டார் வித்யா.
அப்போது, வித்யா ராம்ராஜ், “பி.டி.உஷா மிகவும் திறமையானவர். அவருடைய சாதனையை முறியடிக்க விரும்புகிறேன். வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நிச்சயம் இந்த சாதனையை உடைக்க முயற்சிப்பேன்” என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தான் கடந்த 40 ஆண்டுகளாக இந்தியர்கள் யாராலும் முறியடிக்க முடியாத பி.டி.உஷாவின் சாதனையை சமன் செய்து அசத்தியுள்ளார் வித்யா ராம்ராஜ்.
தொடர்ந்து வித்யா நாளை நடைபெற உள்ள 400 மீட்டர் தடைகள் தாண்டுதல் இறுதிப் போட்டியில் கலந்து கொள்ள உள்ளார். இறுதிப்போட்டியிலும் சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிய விளையாட்டுகள் தரவரிசை பட்டியலில் டாப் 8 இடங்களில் 1 முறையும், ஆசிய சாம்பியன்ஸ் பட்டியலில் முதல் 8 இடங்களில் 1 முறையும் இடம் பெற்றுள்ளார். 3 முறை தேசிய சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளார் வித்யா ராம்ராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தற்போது நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 100 மீட்டர் தடைகள் தாண்டும் போட்டியில் வித்யாவின் சகோதரி நித்யா பங்கேற்று அசத்தியுள்ளார்.
சீனாவில் நடந்து வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியர்கள் சாதனை படைத்து வரும் நிலையில், கோவையைச் சேர்ந்த இந்த இரட்டை சகோதரிகளும் அதில் அங்கம் வகித்து இந்தியா மட்டுமின்றி தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
மோனிஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அயலான் டீசர் அப்டேட்: ஏலியன் பொங்கலுக்கு ரெடியா?
போக்குவரத்து துறையில் தனியார்மயமா? – எடப்பாடி காட்டம்!