vithya ramraj equals pt usha record

பி.டி.உஷாவின் 39 ஆண்டுகால சாதனையை முறியடித்த தமிழ்நாடு வீராங்கனை!

கிரிக்கெட்டிற்கு எப்படி சச்சினோ, அதுபோல ஓட்ட பந்தயம் என்றாலே நம் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வரும் ஒரு பெயர் ‘பி.டி.உஷா’ தான். இந்த பெயரை நாம் வாழ்நாளில் ஒரு முறையாவது கட்டாயம் கேட்டிருப்போம்.

அப்படியான ஜாம்பவானின் 39 ஆண்டுகால சாதனையை, தமிழ்நாட்டை சேர்ந்த 25 வயதான வித்யா ராம்ராஜ் சமன் செய்துள்ளார்.

அது 1984ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் 23வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அந்த விளையாட்டு திருவிழாவில், தடகள போட்டிகளில், 400 மீ தடைகள் தாண்டுதல் ஓட்ட பந்தயத்தில், இந்தியாவுக்காக களம் கண்டார் பி.டி.உஷா.

அந்த போட்டியில், பந்தய இலக்கை 55.42 வினாடிகளில் கடந்த பி.டி.உஷா, 4வது இடத்தை பிடித்தார்.

வெறும் 0.01 நொடிகள் வித்தியாசத்தில், வெண்கல பதக்கத்தை ருமேனிய வீராங்கனை கிறிஸ்டியானா கஜகருவிடம் பறிகொடுத்தார்.

ஆனால், அந்த 55.42 வினாடிகள் என்பது இந்திய தேசிய சாதனையாக மாறியது. அன்று, துவங்கி அடுத்த 4 தசாப்தங்களாக அந்த சாதனை யாராலும் முறியடிக்கப்பட முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில், தற்போது சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்றுவரும் 19வது ஆசிய விளையாட்டு போட்டிகளில், இந்தியா சார்பாக பங்கேற்ற வித்யா ராம்ராஜ்,

400 மீ தடைகள் தாண்டுதல் ஓட்ட பந்தயத்தின் தகுதி சுற்று போட்டியில், அதே 55.42 வினாடிகளில் இலக்கை எட்டி பி.டி.உஷாவின் சாதனையை சமன் செய்துள்ளார்.

மேலும், இந்த பிரிவில் இறுதிப் போட்டிக்கும் அவர் தகுதி பெற்றுள்ளார்.

தற்போது சென்னையில் வசித்து வரும் ஒரு ஆட்டோ ஓட்டுநரின் மகளான வித்யா ராம்ராஜ், தமிழ்நாட்டின் கோவையில் பிறந்தவர்.

இதுவரை, 3 முறை தேசிய சாம்பியன் பட்டம் வென்றுள்ள வித்யா, 400 மீ தடைகள் தாண்டுதல் மட்டுமின்றி 100 மீ மற்றும் 400 மீ ஓட்ட பந்தயத்திலும் பங்கேற்று வருகிறார்.

இவரது சகோதரி நித்யா ராம்ராஜும் ஒரு தடகள வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது நடைபெற்று வரும் ஹாங்சோ ஆசிய விளையாட்டு போட்டிகளில், இந்தியா சார்பில் 100 மீ தடைகள் தாண்டுதல் பிரிவில் நித்யா போட்டியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, கடந்த மாதம் சண்டிகரில் நடைபெற்ற இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் தடகளப் போட்டியில், 400 மீ தடைகள் தாண்டுதல் பிரிவில், இலக்கை 55.43 வினாடிகளில் கடந்த வித்யா ராம்ராஜ், பி.டி.உஷாவின் சாதனையை நெருங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முரளி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

காந்தி ஜெயந்தி: முதல்வர், ஆளுநர் மரியாதை!

தொடர் வீழ்ச்சியில் தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts