19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. துப்பாக்கி சுடுதல், குதிரை ஏற்றம், படகோட்டம் என அனைத்து பிரிவுகளும் பதக்கங்களை குவித்து வந்த இந்திய வீரர், வீராங்கனைகள், தற்போது தடகள போட்டிகளிலும் அசத்தி வருகின்றனர். அக்டோபர் 1 அன்று மட்டும், தடகள போட்டிகளில் 2 தங்கம் உட்பட 9 பதக்கங்களை இந்தியா வென்று குவித்தது.
இதில், மகளிருக்கான ஹெப்டத்லான் போட்டியில், 5712 புள்ளிகள் பெற்ற இந்தியாவை சேர்ந்த 20 வயதேயான நந்தினி அகசரா வெண்கல பதக்கத்தை வென்றார். கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், இதே பிரிவில் தங்கம் வென்ற இந்தியாவின் ஸ்வப்னா பர்மன், 5708 புள்ளிகளுடன் 4ம் இடம் பிடித்தார்.
இந்நிலையில், பதக்கம் வென்ற நந்தினி அகசரா மீது, முன்னாள் சாம்பியன் ஸ்வப்னா பர்மா பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். நந்தினி அகசராவை ஒரு திருநங்கை என ஸ்வப்னா பர்மன் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து X தளத்தில் அவர் பதிவிட்ட பதிவில், “சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்றுவரும் 19 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் எனது வெண்கல பதக்கத்தை ஒரு திருநங்கையிடம் இழந்துவிட்டேன். இது தடகள விதிகளுக்கு எதிரானது என்பதால், எனக்கு எனது பதக்கம் திரும்ப வேண்டும். தயவு செய்து எனக்கு உதவுங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த ட்வீட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது அந்த பதிவை ஸ்வப்னா டெலீட் செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
முரளி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…