தற்போது சீனாவின் ஹன்சோ நகரில் நடைபெற்றுவரும் 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் தொடரில், இந்தியா தொடர்ந்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அதன்படி, இன்றைய 4ம் நாள் ஆட்டத்தின் துவக்கத்திலேயே, இந்திய அணி துப்பாக்கி சுடுதலில் ஒரு தங்கம், ஒரு வெள்ளி என 2 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது.
மகளிருக்கான துப்பாக்கி சுடுதல் போட்டிகளில், 25 மீ பிஸ்டல் (குழு) பிரிவில், இந்தியாவை சேர்ந்த மனு பக்கர், ஈஷா சிங் மற்றும் ரிதம் சங்வான் ஆகியோர் தங்கத்தை கைப்பற்றியுள்ளனர். இதன்மூலம், இந்த தொடரில் இந்தியா தனது 4வது தங்கத்தை வென்றுள்ளது.
இந்த போட்டியில், இந்திய அணி 1759 புள்ளிகள் சேர்த்து முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவுக்கு அடுத்து, 1756 புள்ளிகளுடன் 2ம் இடம் பிடித்த சீனா வெள்ளிப் பதக்கத்தையும், 1749 புள்ளிகளுடன் 3ம் இடம் பிடித்த தென் கொரியா வெண்கல பதக்கத்தையும் வென்றுள்ளது. மேலும், இந்த வெற்றியின் மூலம், மனு பக்கர், ஈஷா சிங் ஆகியோர், இந்திய அணி சார்பில் 25 மீ பிஸ்டல் (தனி) பிரிவின் இறுதிப்போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.
அதேபோல, மகளிருக்கான துப்பாக்கி சுடுதல் போட்டியில், 50 மீ ரைபில் 3 பொசிஷன் (குழு) பிரிவில், இந்தியாவின் ஷிப்த் சம்ரா, அஷி சவுக்ஸி, மணினி கவ்சிக் ஆகியோர் அடங்கிய அணி, 1764 புள்ளிகளுடன் வெள்ளி பதக்கத்தை கைப்பற்றியுள்ளனர். மேலும், ஷிப்த் சம்ரா, அஷி சவுக்ஸி ஆகியோர், 50 மீ ரைபில் 3 பொசிஷன் (தனி) பிரிவின் இறுதிப்போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.
இந்தியா, தற்போது 4 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 16 பதக்கங்களுடன், பதக்கப் பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.
முரளி
சனாதனம் குறித்த பாடம் நீக்கப்படுமா? – அன்பில் மகேஷ் பதில்!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!