சீனாவின் ஹாங்சோ நகரில், கடந்த செப்டம்பர் 23 துவங்கி, 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 5 நாட்கள் முடிவில், இந்தியா 25 பதக்கங்களுடன் 5வது இடத்தில் இருந்தது. இந்நிலையில், 6வது நாளின் துவக்கத்திலேயே, துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் இந்தியா ஒரு தங்கம், ஒரு வெள்ளி என 2 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது.
துப்பாக்கி சுடுதல் போட்டியில், ஆடவர் 50 மீ 3 பொசிஷன் ரைபிள் (குழு) பிரிவில், இந்தியாவின் ஐஸ்வர்ய தோமர், அகில் ஷோரன், ஸ்வப்னில் குஷலே அடங்கிய அணி, தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளனர். மேலும், இந்த போட்டியில் இவர்கள் 1769 புள்ளிகள் சேர்த்ததன் மூலம், புதிய உலக சாதனையையும் படைத்துள்ளனர்.
மேலும், இந்த வெற்றியின் மூலம், ஐஸ்வர்ய தோமர் மற்றும் ஸ்வப்னில் குஷலே ஆகிய இருவரும், ஆடவர் 50 மீ 3 பொசிஷன் ரைபிள் (தனிநபர்) இறுதிப்போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளனர்.
அதேபோல, துப்பாக்கி சுடுதல் போட்டியில் மகளிர் 10 மீ ஏர் பிஸ்டல் (குழு) பிரிவில், ஈஷா சிங், திவ்யா தடிகோள் மற்றும் பாலக் ஆகியோர் அடங்கிய இந்திய அணி, வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளது. இதன்மூலம், இந்த 19வது ஆசிய விளையாட்டு போட்டிகளில், துப்பாக்கி சுடுதலில் மட்டும் இந்தியா 15 பதக்கங்களை வென்றுள்ளது.
மேலும், ஈஷா சிங் மற்றும் பாலக் ஆகியோர், 10 மீ ஏர் பிஸ்டல் (தனிநபர்) பிரிவின் இறுதிப்போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளனர்.
தற்போதுவரை, 2022 ஆசிய விளையாட்டு போட்டிகள் தொடரில், 7 தங்கம், 9 வெள்ளி மற்றும் 11 வெண்கலம் என மொத்தம் 27 பதக்கங்களை இந்தியா கைப்பற்றியுள்ளது.
முரளி
மாற்றுத்திறனாளி வயிற்றில் கண்ணாடி பாட்டில்: வெற்றிகரமாக அகற்றிய மருத்துவர்கள்
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!