சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்றுவரும் 19வது ஆசிய விளையாட்டு போட்டிகளில், 10 நாட்கள் முடிவில் 15 தங்கம், 26 வெள்ளி, 28 வெண்கலம் என 69 பதக்கங்களுடன் இந்தியா 4வது இடத்தில் இருந்தது.
இந்நிலையில், இன்று (அக்டோபர் 4) துவங்கிய 11வது நாள் போட்டிகளில், காலையிலேயே தடகள போட்டிகளின் 35 கி.மீ கலப்பு தொடர் ஓட்டப்பந்தய பிரிவில், இந்தியாவின் மஞ்சு ராணி – பாபு ராம் இணை வெண்கல பதக்கம் வென்றுள்ளது. இந்த ஜோடி, பந்தய தூரத்தை 5 மணி நேரம் 51.14 நிமிடங்களில் கடந்தது.
இந்த போட்டியில், 5 மணி நேரம் 16:41 நிமிடங்களில் பந்தய தூரத்தை கடந்த சீன இணை, தங்கப் பதக்கத்தை வென்றது. அவர்களை தொடர்ந்து பந்தய தூரத்தை 5 மணி நேரம் 22:11 நிமிடங்களில் கடந்த ஜப்பான் இணை வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது.
இவர்களை தொடர்ந்து, வில்வித்தை காம்பௌண்ட் கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டியில், இந்தியாவின் ஜோதி சுரேகா வெண்ணம் – ஓஜஸ் பிரவீன் இணை, கொரியாவின் சேவான் சோ – ஜேஹூன் ஜோ இணையை எதிர்கொண்டது. கடைசி வரை த்ரில்லாக சென்ற இந்த போட்டியில், 159 – 158 என 1 புள்ளி வித்தியாசத்தில் இந்திய இணை தங்கப் பதக்கத்தை வென்றது.
இதன்மூலம், 16 தங்கம், 26 வெள்ளி மற்றும் 29 வெண்கலம் என 71 பதக்கங்களுடன், ஆசிய விளையாட்டு போட்டிகள் வரலாற்றில், ஒரு தொடரில் அதிக பதக்கங்களை கைப்பற்றி, இந்தியா புதிய வரலாறு படைத்துள்ளது. முன்னதாக, ஜகார்தாவில் நடைபெற்ற 2018 ஆசிய போட்டிகளில், 70 பதக்கங்களை கைப்பற்றியதே, இந்தியாவின் சாதனையாக இருந்தது.
முரளி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அண்ணாமலையை மாற்ற கோரிக்கை வைக்கவில்லை: எடப்பாடி
பிரபாஸ் கன்னத்தில் அடித்த ரசிகை: வைரல் வீடியோ!