சீனாவின் ஹாங்சோ நகரில், 19வது ஆசிய போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த விளையாட்டு திருவிழாவின் 13வது நாளில், ஆடவருக்கான கிரிக்கெட்டின் அரையிறுதி ஆட்டத்தில், இந்தியா – வங்கதேச அணிகள் மோதிக்கொண்டன.
இந்த போட்டியில், இந்திய அணி அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. மேலும், இந்த 2023 ஆசிய போட்டிகளில், இந்தியாவுக்காக மேலும் ஒரு பதக்கத்தையும் உறுதி செய்துள்ளது.
ஹாங்சோவில் உள்ள பிங்ஃபெங் கேம்பஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில், முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாத் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதை தொடர்ந்து பேட்டிங்கில் களமிறங்கிய வங்கதேச அணி, துவக்கத்திலிருந்தே இந்திய அணியின் சுழலை சமாளிக்க முடியாமல் திணறியது.
சாய் கிஷோர் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரின் பந்துவீச்சில், வங்கதேசத்தின் விக்கெட்கள் சீட்டுக்கட்டுபோல் சரிந்தது.
இதன் காரணமாக, 20 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணியால் 9 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. இந்தியாவுக்காக, சாய் கிஷோர் 3 விக்கெட்கள், வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
வங்கதேச அணிக்காக ஜாகிர் அலி அதிகபட்சமாக 24 ரன்கள் சேர்த்தார்.
இதனை தொடர்ந்து, 97 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய இந்தியாவுக்கு, ஜெய்ஸ்வால் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.
ஆனால், அதன்பின் ஜோடி சேர்ந்த திலக் வர்மா மற்றும் ருதுராஜ் கெய்க்வாத், பந்துகளை பவுண்டரிகளுக்கு பறக்கவிட்டனர்.
இதன்மூலம், இந்திய அணி 10வது ஓவரிலேயே இலக்கை எட்டி, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
மேலும், இந்த 2023 ஆசிய போட்டிகளில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கத்தையும் உறுதி செய்தது.
திலக் வர்மா 6 சிக்ஸ், 2 பவுண்டரியுடன் 26 பந்துகளில் 55 ரன்களை குவித்தார். ருதுராஜ் கெய்க்வாத் 3 சிக்ஸ், 4 பவுண்டரியுடன் 26 பந்துகளில் 40 ரன்கள் சேர்த்தார்.
முரளி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…