19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், சீனாவில் உள்ள ஹாங்சோ நகரில் கடந்த செப்டம்பர் 23 துவங்கி, கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 8வது நாள் முடிவில், 13 தங்கம், 21 வெள்ளி, 19 வெண்கலம் என 53 பதக்கங்களுடன் இந்தியா 4வது இடத்தில் உள்ளது.
இந்த 8வது நாள் ஆட்டத்தில், 100 மீ தடைகள் தாண்டுதல் பிரிவில், இந்தியாவிற்காக ஜோதி யர்ராஜி களம் கண்டார். இந்த போட்டியின் துவக்கத்திலேயே சர்ச்சை வெடித்தது. துப்பாக்கியை சுடுவதற்கு முன்பே சீனாவை சேர்ந்த வூ யானி ஓட துவங்கிவிட்டார்.
ஆனால், நடுவர்கள் இந்த தவறுக்கு ஜோதி யர்ராஜி தான் காரணம் என குற்றம்சாட்ட, அவர் நடுவர்களிடம் முறையிட்டார்.
இதை தொடர்ந்து, போட்டியின் வீடியோவை ஆய்வு செய்ததில் வூ யானி தான் முதலில் ஓட துவங்கினார் என்பதும், அதன் விளைவாகவே ஜோதி யர்ராஜி நகர்ந்தார் என்பதும் நிரூபணமானது.
இந்த சர்ச்சைக்கு மத்தியில், போட்டி மீண்டும் துவங்கப்பட்டது. சீனாவை சேர்ந்த யுவேய் லின் 12.74 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து முதலிடம் பிடித்தார்.
முந்தைய சர்ச்சைக்கு காரணமான சீன வீராங்கனை வூ யானி 2ம் இடம் பிடித்தார். அவர்களை தொடர்ந்து, 12.91 வினாடிகளில் இலக்கை எட்டிய ஜோதி யர்ராஜி, 3ம் இடத்தை பிடித்து வெண்கல பதக்கத்தை கைப்பற்றினார்.
ஆனால், தவறான துவக்கத்திற்காக 2ம் இடம் பிடித்த சீனாவின் வூ யானி போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதை தொடர்ந்து, ஜோதி யர்ராஜியின் வெண்கல பதக்கம் வெள்ளிப் பதக்கமாக உயர்த்தப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து விளக்கிய இந்தியாவின் நட்சத்திர நீளம் தாண்டுதல் வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ்,
“போட்டி விதி 16.8-ன்படி, தவறான துவக்கம் நிகழ்ந்தால், யார் அதற்கு காரணமோ அவர் தகுதி நீக்கம் செய்யப்படலாம். இது விதிகளில் தெளிவாக உள்ளது.
இந்த போட்டியில், ஜோதி யர்ராஜியின் கைகள் தரையில் இருந்தபோது, வூ யானி ஓட துவங்கிவிட்டார் என்பது தெளிவாக ஆவணமாகிவிட்டது.
இது தொடர்பாக, நாங்கள் 100 டாலர் கட்டணம் செலுத்தி புகாரை பதிவு செய்தோம். அதில் நாங்கள் வெற்றியும் பெற்றுவிட்டோம்.
அதன் காரணமாகவே, ஜோதி யர்ராஜியின் வெண்கலப் பதக்கம் வெள்ளியாக உயர்த்தப்பட்டது”, எனக் கூறியுள்ளார்.
முரளி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“கிராமங்கள் தன்னிறைவு பெற திமுக அரசு உழைக்கும்” – ஸ்டாலின்
ஆசிய போட்டிகள் 2023: ஒருநாளில் 15 பதக்கங்கள்… அசத்தும் ‘இந்தியா’!