சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் 19வது ஆசிய விளையாட்டு போட்டிகளின், 10வது நாள் ஆட்டத்தில், இந்திய அணி 2 தங்கம், 2 வெள்ளி, 5 வெண்கலம் என 9 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது. இதன்மூலம், மொத்தம் 15 தங்கம், 26 வெள்ளி, 29 வெண்கலம் என 69 பதக்கங்களுடன், இந்தியா தொடர்ந்து 4வது இடத்தில் நீடிக்கிறது.
இந்நிலையில், இந்த விளையாட்டு திருவிழாவில், தடகள போட்டிகளில், ஆடவருக்கான மும்முறை நீளம் தாண்டுதல் போட்டியில், தமிழ்நாட்டை சேர்ந்த பிரவீன் சித்திரவேல் இந்தியாவுக்காக வெண்கல பதக்கத்தை வென்று கொடுத்துள்ளார். இந்த மும்முறை நீளம் தாண்டுதல் போட்டியில், பிரவீன் 16.68 மீ தூரம் கடந்து இந்த பதக்கத்தை தன்வசமாக்கினார்.
இந்த பிரிவில், சீன வீரர்களான யாமிங் சூ மற்றும் யோகுவிங் ஃபேங் ஆகியோர் முதல் 2 இடங்களை பிடித்து, முறையே தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை கைப்பற்றினர். இந்த போட்டியில், யாமிங் சூ 17.13 மீ தூரத்தை கடந்து தங்கப் பதக்கத்தையும், யோகுவிங் ஃபேங் 16.93 மீ தூரத்தை கடந்து வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த போட்டியில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீரரான அப்துல்லா அபுபக்கர், 16.62 மீ தூரத்தை கடந்து 4வது இடத்தை பிடித்தார்.
22 வயதான இந்த பிரவீன் சித்திரவேல், தமிழ்நாட்டின் தஞ்சாவூர் பகுதியை சேர்ந்தவர். இவர், முன்னதாக இந்த ஆண்டு துவக்கத்தில் கசகஸ்தானில் நடைபெற்ற ஆசிய உள்ளரங்கு தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், ஆடவர் மும்முறை நீளம் தாண்டுதல் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தார். மேலும், அந்த போட்டியில் 16.98 மீ தூரம் தாண்டிய பிரவீன், புதிய தேசிய சாதனையையும் படைத்திருந்தார்.
மேலும், அதற்கு முன்னதாக குஜராத்தில் நடைபெற்ற 36வது தேசிய விளையாட்டு போட்டிகளில், ஆடவர் மும்முறை நீளம் தாண்டுதல் பிரிவில், பிரவீன் சித்ரவேல் தங்கப் பதக்கத்தை கைப்பற்றி அசத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முரளி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நெல்லை இளம்பெண் படுகொலை: திருமாவளவன் கண்டனம்!
த்ரில் வெற்றியுடன் தங்கம் கைப்பற்றிய பாருல்: 10வது நாளிலும் ‘இந்தியா’ அசத்தல்!