ஆசிய போட்டிகள் 2023: 5வது இடத்திற்கு முன்னேறிய இந்தியா!

Published On:

| By Kavi

Asian Games 2023 India

2023ம் ஆண்டுக்கான 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள், சீனாவில் உள்ள ஹாங்சோ நகரில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

இந்த விளையாட்டு திருவிழாவில், இந்திய வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து தங்களது அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், 5வது நாளான இன்று (செப்டம்பர் 28), இந்திய அணி 1 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் என 3 பதக்கங்களை வென்றுள்ளது.

முதலாவதாக, இந்திய அணிக்காக, ஆண்கள் 10 மீ ஏர் பிஸ்டல் குழு பிரிவு போட்டியில் பங்கேற்ற சரப்ஜோத் சிங், சிவா நர்வால் மற்றும் அர்ஜுன் சிங் சீமா, அந்த போட்டியில் ‘தங்கம்’ வென்று, ஆசிய போட்டிகளில் இந்தியாவின் தங்கப் பதக்க எண்ணிக்கையை 6 ஆக உயர்த்தியுள்ளனர்.

மகளிருக்கான வூஷூ போட்டியின் 60 கிலோ எடை பிரிவில், இந்தியாவுக்காக ரோசிபினா தேவி வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.

முன்னதாக, 2018ம் ஆண்டு, ஜகர்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில், ரோசிபினா இதே பிரிவில் வெண்கல பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குதிரை ஏற்றம் போட்டியின் தனிநபர் டிரஸ்சேஜ் பிரிவில், அனுஷ் அகர்வாலா வெண்கலப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார். இந்த போட்டியில், ஜெய் ஹோ மற்றும் மா துஜே சலாம் ஆகிய பாடல்களுக்கு, தனது குதிரையுடன் அனுஷ் அகர்வாலா நடனமாடியிருந்தார்.

இந்த பிரிவில், இந்தியா வெல்லும் முதல் பதக்கம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, குதிரை ஏற்றம் டிரஸ்சேஜ் குழு பிரிவில் 41 ஆண்டுகளுக்கு பிறகு தங்கம் வென்று இந்திய அணி சாதனை படைத்திருந்தது.

இதன்மூலம், இந்த 2023 ஆசிய விளையாட்டு போட்டிகளில், 6 தங்கம், 8 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தம் 25 பதக்கங்களுடன், இந்தியா 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

90 தங்கம், 51 வெள்ளி, 26 வெண்கலம் என 167 பதக்கங்களுடன் சீனா முதலிடத்தில் உள்ளது. 24 தங்கங்களுடன் கொரியா 2வது இடத்திலும், 18 தங்கங்களுடன் ஜப்பான் 3வது இடத்திலும் உள்ளது.

முரளி

டெங்கு தடுப்பு ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட எம்.எல்.ஏ.வுக்கு காய்ச்சல்!

உலகக்கோப்பைக்கான இந்திய ஒருநாள் அணியில் அதிரடி மாற்றம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel