ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் வங்காள தேச அணியுடன் மோதிய ஆப்கானிஸ்தான் அணி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்துள்ளது.
15ஆவது ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது.
இதில் பங்கேற்றுள்ள ஆறு அணிகள் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
ஏ-பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளும், பி-பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை அணிகளும் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வோர் அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும்.
லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும்.
இந்தப் போட்டி தொடரின் முதல் ஆட்டத்தில் இலங்கையுடன் மோதிய ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்று பி-பிரிவு புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
இரண்டாவது ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்திய இந்திய அணி ஏ-பிரிவு புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
இந்த நிலையில் சார்ஜாவில் நேற்று (ஆகஸ்ட் 30) இரவு நடைபெற்ற மூன்றாவது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் – வங்காளதேசம் அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதன்படி ஆப்கானிஸ்தான் அணி பந்து வீசியது. வங்காளதேச அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்ததால் அந்த அணியின் ரன் வேகம் அதிகரிக்கவில்லை.
ஆப்கானிஸ்தானின் கட்டுக்கோப்பான பந்து வீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறி கொடுத்தது.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட்டுகள் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்தது.
ஆப்கானிஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக முஜீப் மற்றும் ரஷீத் கான் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது.
அதில் முதலில் களமிறங்கிய ரமனுல்லா குர்பாஸ் 11 ரன்களும், ஹஸ்ரத்துல்லா ஷசாய் 23 ரன்களும் அடுத்து களமிறங்கிய கேப்டன் முகமது நபி 8 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து ஜோடி சேர்ந்த நஜிபுல்லா ஜட்ரன், இப்ராகிம் ஜட்ரன் ஜோடி அதிரடியில் மிரட்டியது.
குறிப்பாக இந்த ஜோடியில் வங்காளதேச அணியினரின் பந்து வீச்சை நஜிபுல்லா ஜட்ரன் நாலாபுறமும் பறக்க விட்டார்.
இறுதியில் நஜிபுல்லா ஜட்ரன் 43 (17) ரன்களும், இப்ராகிம் ஜட்ரன் 42 (41) ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 18.3 ஒவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் எடுத்தது.
வங்காள தேச அணியின் சார்பில் ஹகிப் அல் ஹசன், ஹூசைன் மற்றும் சைபுதீன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதன்மூலம் வங்காளதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்று சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்துள்ளது.
இன்று (ஆகஸ்ட் 31) நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணி, ஹாங்காங் அணியுடன் மோதுகிறது. இதில் இந்திய அணி வெற்றி பெற்றால் சூப்பர் சுற்றுக்குள் நுழையும்.
-ராஜ்
ஆசியக் கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா!