2024 ஹீரோ ஆசிய சாம்பியன்ஸ் ட்ரோபி தொடர் சீனாவில் கடந்த செப்டம்பர் 8 துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், சீனா, மலேஷியா மற்றும் கொரியா என 6 அணிகள் பங்கேற்றுள்ளன.
கடந்த 2011 முதல் துவங்கி இந்த தொடர் நடைபெற்று வரும் நிலையில், 2023ஆம் ஆண்டுக்கான ஆசிய சாம்பியன்ஸ் ட்ரோபி தொடர் சென்னையில் நடைபெற்றது. அந்த தொடரில் அபாரமாக செயல்பட்ட இந்திய அணி கோப்பையை வென்றது.
இந்நிலையில், அதே வேகத்தில் 2024 தொடரில் பங்கேற்ற ஹர்மன்ப்ரீத் தலைமையிலான இந்தியப் படை, விளையாடிய முதல் 3 போட்டிகளில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ஹாட்ரிக் வெற்றி பெற்றது. சீனாவுக்கு எதிராக 3-0, ஜப்பானுக்கு எதிராக 5-1, கடந்த ஆண்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறிய மலேஷியாவுக்கு எதிராக 8-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், செப்டம்பர் 12 அன்று நடைபெற்ற தனது 4வது லீக் போட்டியில், இந்திய அணி கொரியாவை எதிர்கொண்டது.
இந்த போட்டியின் முதல் பகுதியிலேயே தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிய இந்தியா, 2 கோல்களை அடித்தது. முதல் பகுதியின் 8வது நிமிடத்தில் அரைஜீத் சிங், 9வது நிமிடத்தில் பெனால்டி கார்னரில் ஹர்மன்ப்ரீத் சிங் கோல்களை அடித்தனர்.
2வது பகுதியில், இந்தியாவுக்கு கொரியா அணி கடும் நெருக்கடி கொடுத்தது. இதன் காரணமாக, இந்திய அணி மேலும் கோல்களை அடிக்க திணறிய நிலையில், அந்த பகுதியின் கடைசி நிமிடத்தில் ஜிஹூன் யாங் கொரியாவுக்கு முதல் கோலை அடித்தார்.
தொடர்ந்து, 3வது பகுதியில் மீண்டும் அட்டாக் செய்த இந்தியா, அந்த பகுதியில் தனக்கு கிடைத்த 2வது பெனால்டி கார்னரை கோலாக மாற்றியது. மீண்டும் ஹர்மன்ப்ரீத் சிங் இந்திய அணிக்கு இந்த 3வது கோலை அடித்தார்.
இதை தொடர்ந்து, ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 3-1 என இந்த தொடரில் தொடர்ந்து தனது 4வது வெற்றியை உறுதி செய்தது.
அதுமட்டுமின்றி, இந்த வெற்றியின் மூலம், தனது அரையிறுதி வாய்ப்பையும் இந்தியா உறுதி செய்துள்ளது. இந்த ஆசிய சாம்பியன்ஸ் ட்ரோபி தொடர் இதுவரை 7 முறை நடைபெற்றுள்ள நிலையில், அதில் 4 முறை இந்திய அணியே சாம்பியன் பட்டம் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பேன்” – பவள விழாவுக்கு ஸ்டாலின் அழைப்பு!
ஹெல்த் டிப்ஸ்: டீ குடிப்பதற்கான சரியான நேரம் எது?