சீனாவின் ஹங்சோ நகரில் நடைபெற்றுவரும் 19வது ஆசிய விளையாட்டு திருவிழாவில் தொடர்ந்து முன்னிலை செலுத்திவரும் இந்தியா, ஒரேநாளில் 15 பதக்கங்களை குவித்து புதிய சாதனை படைத்துள்ளது. நேற்று நடைபெற்ற 8வது நாள் போட்டிகளில், இந்திய வீரர்கள் 3 தங்கம், 7 வெள்ளி மற்றும் 5 வெண்கலம் என 15 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.
முதலாவதாக, துப்பாக்கி சுடுதல் ஆடவர் ட்ராப் (குழு) பிரிவில், கைனான் செனாய், ஜொரோவர் சிங் மற்றும் பிரித்விராஜ் தொண்டைமான் ஆகியோர் அடங்கிய அணி தங்கம் வென்றது. அதை தொடர்ந்து, துப்பாக்கி சுடுதல் ஆடவர் ட்ராப் (தனிநபர்) பிரிவில், கைனான் செனாய் வெண்கல பதக்கத்தை கைப்பற்றினார்.
அதேபோல, மகளிர் ட்ராப் (குழு) பிரிவில், ராஜேஸ்வரி குமாரி, மனிஷா கீர் மற்றும் பிரீத்தி ராஜக் ஆகியோர் அடங்கிய இந்திய அணி, வெள்ளிப் பதக்கத்தை தன்வசமாக்கியது.
மகளிருக்கான தனிநபர் கோல்ஃப் ஆட்டத்தில் துவக்கத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்தி வந்த அதிதி அசோக், வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
இதன்மூலம், கோல்ஃப் போட்டியில் பதக்கம் வெல்லும் முதல் இந்திய பெண் என்ற பெருமையை அவர் பெற்றார். முன்னதாக நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், அதிதி அசோக் நூலிழையில் வெண்கல பதக்கத்தை தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பின், ஆடவருக்கான பேட்மிண்டன் இறுதிப்போட்டியில், சீன அணியை எதிர்கொண்ட இந்திய அணி, வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளது. ஆசிய போட்டிகளில், இந்த பிரிவில் இந்தியா வெள்ளி வெல்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களை தொடர்ந்து, தடகள போட்டிகளில் அசத்திய இந்திய வீரர், வீராங்கனைகள், இந்தியாவை பதக்க மழையில் நனைய வைத்துள்ளனர்.
ஆடவருக்கான 3000மீ ஸ்டீபில்சேஸ் போட்டியில், அவினாஷ் சப்லே தங்கம் வென்றார்.
ஆடவருக்கான குண்டு எரிதலில் தஜிந்தரபால் சிங் தங்கம் வென்றார்.
மகளிருக்கான 100மீ தடைகள் தாண்டுதல் போட்டியில், இந்தியாவின் ஜோதி யர்ராஜி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
மகளிருக்கான 1500மீ ஓட்டப்பந்தயத்தில், ஹர்மிலன் பெய்ன்ஸ் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். இவர் 800மீ ஓட்டப்பந்தயத்திலும் இந்தியாவிற்காக பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆடவருக்கான 1500மீ ஓட்டப்பந்தயத்தில், அஜய் சரோஜ் வெள்ளிப் பதக்கத்தை தன்வசமாக்கினார். இதே பிரிவில், இந்தியாவின் ஜின்சன் ஜான்சன் வெண்கல பதக்கத்தை வென்றார்.
இவர்களை தொடர்ந்து, ஆடவருக்கான நீளம் தாண்டுதல் போட்டியில், இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர் வெள்ளிப் பதக்கத்தை வென்று அசத்தினார்.
மகளிருக்கான வட்டு எறிதல் போட்டியில், சீமா புனியா வெண்கல பதக்கத்தை வென்றார். இது அவருடைய 3வது ஆசிய விளையாட்டு பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
மகளிருக்கான ஹெப்டத்லான் போட்டியில், நந்தினி அகசரே வெண்கல பதக்கத்தை வென்றார்.
மேலும், மகளிருக்கான குத்துச்சண்டை போட்டியில் 50 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் நிகத் ஜரீன் வெண்கல பதக்கத்தை வென்றார்.
இதன்மூலம், ஆசிய போட்டிகளின் 8வது நாள் முடிவில், 13 தங்கம், 21 வெள்ளி, 19 வெண்கலம் என மொத்தம் 53 பதக்கங்களை வென்ற இந்திய அணி, 4வது இடத்தில் தொடர்கிறது.
முரளி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
முகம் பொலிவா இருக்கனுமா..இந்த பொருட்கள போட்டு பாருங்க!
வேலைவாய்ப்பு: ESIC – யில் பணி!