யப்பாடா… விராட் கோலி சதம் அடிச்சிட்டாரு!

விளையாட்டு

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டியில் ரன் மெஷின் விராட் கோலி, சதம் அடித்து தன்மீதான விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

ஆறு அணிகள் பங்கேற்ற ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று முடிவடைந்து சூப்பர் 4 சுற்றுக்குள் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் நுழைந்தன.

இந்த சுற்றில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும். ஆனால், சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளிடம் தோல்வியடைந்தது.

இதன்மூலம் ஆசியக் கோப்பை இறுதிபோட்டிக்கு செல்லும் வாய்ப்பை இந்தியா இழந்தது.

ஆப்கானிஸ்தானும் ஏற்கெனவே இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்துவிட்டதால் ஆட்டத்தின் முடிவு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இந்த நிலையில், இந்தியா சூப்பர் 4 சுற்றில் இன்று (செப்டம்பர் 8) ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொண்டது.

இந்த சம்பிரதாய மோதலில் ஆறுதல் வெற்றிக்காக களம் இறங்கும் இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.

அதன்படி, கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ஓய்வளிக்கப்பட்டு, அவருக்குப் பதில் கே.எல்.ராகுல் கேப்டன் பொறுப்பை ஏற்றார். மேலும், இன்றைய போட்டியில் தினேஷ் கார்த்திக் மற்றும் அஸ்வின் ஆகியோருக்கு விளையாட வாய்ப்பு அளிக்கப்பட்டது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி, இந்தியாவை பேட் செய்ய பணித்தது. அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் கே.எல்.ராகுலும், முன்னாள் கேப்டன் விராட் கோலியும் களமிறங்கினர்.

இந்த இணை ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சாளர்களை நாலாபுறமும் சிதறடித்தது. அதிலும் குறிப்பாக விராட் கோலி வாணவேடிக்கை காட்டினார். இறுதிவரை களத்தில் இருந்த விராட் கோலி, 61 பந்துகளில் 122 ரன்களை எடுத்து அனைவருக்கும் அதிர்ச்சியளித்தார். அவருடைய பேட்டிங்கில் 12 பவுண்டரிகளும், 6 சிக்ஸர்களும் அடங்கும்.

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பேட்டிங்கில் சொதப்பிவந்த கோலி, இந்த ஆட்டம் மூலம் மீண்டும் தன்னுடைய பழைய ஆட்டத்தை மீட்டெடுத்துள்ளார். அதுமட்டுமல்ல, இந்த தொடரில் இந்தியா சார்பில் 2 அரைசதம், 1 சதம் அடித்த வீரரும் விராட் கோலி மட்டுமே.

இதன்மூலம், அவர் மீதிருந்த விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். இன்று அவர் அடித்த சதம் சர்வதேசப் போட்டிகளில் அவரது 71வது சதமாகும். கடைசியாக கடந்த 2019ஆம் ஆண்டு விராட் கோலி சதம் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் போட்டியில் அவர் 27 சதங்களையும், ஒருநாள் போட்டியில் 43 சதங்களையும் அடித்துள்ள விராட் கோலி, சர்வதேச டி20 போட்டியில் இன்று முதல் சதம் அடித்துள்ளார். இந்த சதத்தை அவருடைய மனைவி அனுஷ்காவுக்கும் அவரது மகளுக்கும் சமர்ப்பித்துள்ளார்.

இந்த நிலையில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்தது. கேப்டன் ராகுல் 41 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார். அதில் 6 பவுண்டரிகளும், 2 சிக்ஸர்களும் அடங்கும். சூரிய குமார் யாதவ் 6 ரன்கள் எடுத்தார். ரிஷாப் பாண்ட் 16 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி விளையாடி வருகிறது. இரவு 9.40 மணியளவில் ஆப்கானிஸ்தான் அணி 4 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 18 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.

ஜெ.பிரகாஷ்

டி20 தோல்விக்கு பதிலடி: இந்தியா-பாகிஸ்தான் போட்டி பற்றி ராகுல்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *