அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்திய ஆல்ரவுண்டர் அஸ்வின் கிரிக்கெட் பயிற்சி அளிக்க சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக சென்னையைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் வலம் வருகிறார்.
சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் 25 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்தார்.
இதுவரை 92 டெஸ்ட் போட்டிகளில் 474 விக்கெட்டுகள், 113 ஒருநாள் போட்டிகளில் 151 விக்கெட்டுகள் மற்றும் 65 டி20 போட்டிகளில் 72 விக்கெட்டுகள் என மொத்தம் 697 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
மேலும் 36 வயதான அஸ்வின் ஐசிசி டெஸ்ட் பவுலர் தரவரிசையில் 869 புள்ளிகளுடன் முதலிடமும், ஆல்ரவுண்டர் தரவரிசையில் 359 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளார்.
இவ்வாறு இந்திய அணிக்கு சிறந்த பங்களிப்பை அளித்து வரும் அஸ்வினை அரசு பள்ளி மாணவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்க சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.
மாநகராட்சி பள்ளிகளில் கிரிக்கெட் உள்கட்டமைப்பு வசதியை உருவாக்கும் முயற்சியில் சென்னை பெருநகர மாநகராட்சி இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளது.
அதன்படி கிரிக்கெட்டில் ஆர்வமுள்ள சென்னை மாநகராட்சி பள்ளியைச் சேர்ந்த 300 மாணவர்கள் அடையாளம் காணப்பட்டனர். அவர்களில் தற்போது 30 பேர் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு அடுத்த வாரம் பயிற்சி வழங்கப்பட உள்ளது. அதற்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபல கல்லூரியின் கிரிக்கெட் மைதானத்தில் பயிற்சி வழங்க ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
இதே போல அரசு பள்ளியில் 11,12ம் வகுப்பு பயிலும் 20 மாணவிகள் உள்பட 60 பேருக்கு கால்பந்து பயிற்சியும் அளிக்க சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா
ராகுல் காந்தி பதவி நீக்கம்: காங்கிரஸ் போராட்டம்!
ராகுல் பதவி பறிப்புக்கும், பாஜகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை – ராம சீனிவாசன்