போக்கஸில் சிக்கிய அஸ்வின்: கலாய்க்கும் ரசிகர்கள்!

Published On:

| By Jegadeesh

ஜிம்பாப்வேவுக்கு எதிராக இந்திய அணி மோதிய ஆட்டத்தின் தொடக்கத்தில் இந்தியவீரர் அஸ்வின் செய்த செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஐசிசி டி20 உலகக்கோப்பையில் நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இந்த தொடரில் 15 வருடங்களுக்கு பின் கோப்பையை வெல்லும் முனைப்புடன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

போக்கஸில் சிக்கிய அஸ்வின்

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் கடைசி ஓவரில் களமிறங்கி சொதப்பினார் தினேஷ் கார்த்திக். அடுத்து களமிறங்கிய அஸ்வின், தினேஷ் கார்த்திக் செய்த தவறை செய்யாமல் கடைசிப் பந்தை தூக்கி அடித்து பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியை உறுதி செய்த அவரைக் கொண்டாடாத ரசிகர்களே கிடையாது.

அதேபோல் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியிலும் தினேஷ் கார்த்திக் சொதப்பிய நிலையில், அஸ்வின் 6 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து, 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றிக்கு உதவினார். ஜிம்பாப்பேவுக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்டுகளை எடுத்த அசத்தினார்.

தன்னுடைய ஜெர்சி எது?

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியின் துவக்கத்தில் டாஸ் வென்ற கேப்டன் ரோகித் சர்மா செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது, பின்புறத்தில் நின்ற அஸ்வின் மைதானத்தில் கிடந்த 2 ஜெர்சிகளை கையிலெடுத்து, அதில் தன்னுடையது எது என்பதை கண்டுபிடிப்பதற்காக நுகர்ந்து பார்த்தார். அதன் முடிவில் ஒரு சில நொடிகளிலேயே சரியானதை கண்டறிந்த அவர், தன்னுடையதை எடுத்துக் கொண்டு மற்றொன்றை கீழே போட்டு விட்டுச் சென்றார்.

அதை யாருமே கவனிக்காத நிலையில் ஒரு ரசிகர் மட்டும் தொலைக்காட்சியில் டாஸ் வீசப்பட்ட போது ரோகித் சர்மாவுக்கு பின்னால் நின்று அவர் செய்த இந்த வேலையை போக்கஸ் செய்து வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அதிலும் “அஸ்வின் அண்ணா, இந்த வகையில் தான் உங்களுடைய துணியை கண்டுபிடிக்க வேண்டும்” என்று கலாய்த்துள்ளார்.

மேலும் அந்த வீடியோவை பார்த்து வயிறு குலுங்க சிரிக்கும் முன்னாள் வீரர் அபிநவ் முகுந்த், ”எதை வைத்து உங்களுடைய சரியான ஜெர்சியை கண்டறிந்தீர்கள்” என்று அஷ்வினிடம் ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள அஸ்வின் ”இறுதியாக நான் பயன்படுத்தும் வாசனை திரவியத்தை சரிபார்த்து கண்டுபிடித்தேன்” என்று கூறியுள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

கையில் காயம் : அரையிறுதிப் போட்டியில் ஆடுவாரா ரோகித்?

தமிழகத்தில் அடித்து வெளுக்கப் போகும் கன மழை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share