தமிழ்நாடு ப்ரீமியர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், இன்றைய போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியும் நெல்லை ராயல் கிங்ஸ் அணியும் மோதின.
இந்த ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ப்ரதோஷ் பால் மற்றும் ஜெகதீசன் ஆகியோர் களமிறங்கினர்.
பிரதோஷ் 2 ரன்னிலும் , ஜெகதீசன் 21 ரன்களிலும் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர்.
அடுத்ததாக களமிறங்க அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர் பாபா அபராஜித் தன்னுடைய பங்களிப்பை சிறப்பாக வெளிப்படுத்தினார். அதன்படி 51 பந்துகளில் 4 பவுண்டரிகள் 5 சிக்ஸர்கள் என மொத்தம் 79 ரன்கள் எடுத்து அசத்தினார். பின்னர், நெல்லை ராயல் கிங்ஸ் அணியின் பந்து வீச்சாளர் பொய்யாமொழியின் பந்தில் அவுட் ஆனார்.
இதனைத்தொடர்ந்து களமிறங்கிய சஞ்சய் 15 ரன்களும் , லோகேஷ் 1 ரன்னிலும் அவுட்டாக அடுத்து களமிறங்கிய ஹரிஸ் குமார் 20 பந்துகளில் 17 ரன்களும் , 12 பந்துகளில் 13 ரன்களும் எடுத்தனர்.
அதன்படி 20 ஓவர் முடிவில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது.

இதனைத்தொடர்ந்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை ராயல் கிங்ஸ் அணி களமிறங்கியது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான அருண் கார்த்திக் மற்றும் ஸ்ரீ நிரஞ்சன் களமிறங்கினர்.
ஒரு புறம் ஸ்ரீ நிரஞ்சன் நிதானமாக ஆடி 24 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். மறுபுறம் அருண் கார்த்திக் ஆரம்பம் முதலே தன்னுடைய அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 61 பந்துகளில் 5 சிக்ஸர் , 10 பவுண்டரிகள் என மொத்தம் 104 ரன்கள் எடுத்து அசத்தினார்.

இறுதியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 18.5 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
மு.வா.ஜெகதீஸ் குமார்