பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் பாகிஸ்தான் நாட்டுக்கு தங்கப்பதக்கம் வென்று கொடுத்த அர்ஷத் நதீம் மிகவும் எளிமையானவர் என்றும்தங்கள் வீட்டுக்கு வந்தால் இருப்பதை சாப்பிட்டு விட்டு மகிழ்ச்சியுடன் செல்வார் எனவும் அவரது மாமனார் நவாஸ் மருமகன் பற்றி சிலாகித்து பேசியுள்ளார். .
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த சிறிய கிராமத்தில் இருந்து ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றவர் தான் அர்ஷத் நதீம். இவருக்கு பாகிஸ்தான் அரசு மற்றும் விளையாட்டுத் துறை போதிய உதவிகள் செய்யாத போதும், தனது சொந்த முயற்சியில் பயிற்சி மேற்கொண்டு இத்தகைய இமாலய சாதனையை படைத்துள்ளார்.
உலகின் முன்னணி ஈட்டி எறிதல் வீரர்களில் ஒருவராக அறியப்பட்ட பின்பும் ஒரு பழைய ஈட்டியை கொண்டே அவர் பயிற்சி எடுத்து வந்தார். ஆனால், எதையும் பற்றி கவலைப்படாத அவர், பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் 92.97 மீட்டர் தூரம் ஈட்டியை வீசி ஒலிம்பிக் சாதனை படைத்து தங்க பதக்கத்தை வென்றார். இதனால், பதக்க பட்டியலில் பாகிஸ்தான் இந்தியாவை பின்னுக்கு தள்ளியது. பாகிஸ்தான் பட்டியலில் 62வது இடத்திலும் 6 பதக்கங்கள் வென்ற இந்தியா 71- வது இடத்தையும் பிடித்துள்ளது.
ஒற்றை பதக்கத்தால் நாட்டுக்கு பெருமை தேடி தந்த அர்ஷத் நாடு திரும்பிய போது, அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சிலர் பரிசுகளையும் அளித்தனர். அதே வேளையில் அவரின் மாமனார் எருமை மாடு ஒன்றை பரிசாக அளித்தார். இவர்களின் கிராமத்தில் எருமைமாடு பரிசளிப்பதுதான் மதிப்புக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. தனது மருமகன் குறித்து நவாஸ் கூறுகையில் , இவ்வளவு பெரிய வெற்றி பெற்ற பிறகும் அர்ஷத் நதீம் தனது கிராமத்தை மறக்கவில்லை என்றும் அவர் இன்னும் அதே கிராமத்தில் தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களுடன் தான் வகிக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
-எம்.குமரேசன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஸ்டாலின் குறித்து அவதூறு பேச்சு : சி.வி.சண்முகம் மீதான வழக்கு ரத்து!
ஹிண்டன்பர்க் அறிக்கை: பங்குச்சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் டார்கெட்… பாஜக குற்றச்சாட்டு!