ஐரோப்பாவில் நடைபெற்ற யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நள்ளிரவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 4வது முறையாக ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
அதனைத்தொடர்ந்து இந்திய நேரப்படி இன்று (ஜுலை 15) அதிகாலை 5.30 மணிக்கு நடைபெற்ற கோபா அமெரிக்கா கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி பக்கம் அனைவரின் கவனமும் குவிந்தது.
ஏனெனில் இதில் நடப்பு உலகக்கோப்பை சாம்பியன் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணியும், ஜேம்ஸ் ரொட்ரிக்யூஸ் தலைமையிலான கொலம்பியா அணியும் மோதின.
அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள ஹார்ட் ராக் ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டியில் ஆரம்பம் முதலே அர்ஜென்டினா அணியினர் தாக்குதலை வேகப்படுத்தினர்.
போட்டியின் 36-வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி பந்தை அடிக்க முயன்ற போது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக பரிசோதனை நடைபெற்றதை அடுத்து சிறிது நேரத்தில் அவர் மீண்டும் களத்திற்கு திரும்பி ஆட முயன்றார்.
ஆனால் காயம் மோசமாகவே மெஸ்ஸி ஆடுகளத்தை விட்டு கண்ணீருடன் வெளியேறினார். தொடர்ந்து முதல் பாதியில் கோல் எதுவும் விழவில்லை.
தொடர்ந்து இரு அணிகளும் கடுமையாக போராடிய நிலையில், ஆட்டம் முடியும் வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து 112வது நிமிடத்தில் லாட்டுரோ மார்டினேஸ் அர்ஜெண்டினா அணிக்காக கோல் அடித்தார்.
இதை அடுத்து 1 – 0 என்ற கோல் கணக்கில் வென்ற அர்ஜெண்டினா, கொலம்பியாவை வீழ்த்தி கோபா அமெரிக்கா கோப்பையை கைப்பற்றியது. இதன்மூலம் இந்தத் தொடரை 16-வது முறையாக வென்று அர்ஜென்டினா அணி சாதனை படைத்துள்ளது.
மேலும் கடந்த 2020ஆம் ஆண்டுவரை எவ்வளவு போராடியும் ஒரு சர்வதேச கோப்பையை கூட வெல்ல முடியாமல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி தவித்தது. இதனால் அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளில் கோபா அமெரிக்கா (2021), ஃபினாலிஸ்மா கோப்பை(2022) பிஃபா உலகக்கோப்பை (2022) கோபா அமெரிக்கா (2024) என 4 கோப்பைகளை மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி வென்று சாதனை படைத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
நடுரோட்டில் ஆட்டை வெட்டுவது ஏற்க முடியாது : உயர் நீதிமன்றம்!
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி : கனமழைக்கு வாய்ப்பு!