22 வது ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது.
ஃபிஃபா உலகக்கோப்பை காலிறுதி சுற்றில் இன்று(டிசம்பர் 9 ) நடக்கும் இரண்டு போட்டிகளில் பங்கேற்கும் அணிகளின் பலம், பலவீனம் பற்றி பார்க்கலாம்.
இரண்டு நாள் ஓய்வுக்கு பிறகு காலிறுதி போட்டிகள் இன்று தொடங்க உள்ளன. இந்த காலிறுதி சுற்றுக்கு நடப்பு சாம்பியனான பிரான்ஸ், நெதர்லாந்து, அர்ஜென்டினா, குரோஷியா, பிரேசில், இங்கிலாந்து, மொராக்கோ, போர்ச்சுகல் அணிகள் முன்னேறியுள்ளன.
இந்த 8 அணிகள் நாக் அவுட் அடிப்படையில் ஒரு அணியுடன் மோத உள்ளன. அதில் வெற்றிபெறும் அணி அரையிறுதிக்கு முன்னேறும்.
அனைத்து போட்டிகளிலுமே நட்சத்திர அணிகள் மோத உள்ளதால், காலிறுதி போட்டிகளுக்கு ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று இரவு 8.30 மணிக்கு நடக்க உள்ள போட்டியில் வலிமையான பிரேசில் அணியை எதிர்த்து கடந்த முறை உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய குரோஷியா மோத உள்ளது.
காயத்தில் இருந்து மீண்டு வந்த நெய்மர், அட்டாக்கில் பாயும் வினிசியஸ், பைக் சைக்கிள் கிக்கில் அசத்திய ரிச்சர்லிசன் என வலிமையான அட்டாக்கோடு பிரேசில் அணி களமிறங்க உள்ளது.
அதேபோல் குரோஷியா அணியை பொறுத்தவரை கேப்டன் லூகா மோட்ரிச்சின் கடைசி உலகக்கோப்பைத் தொடராகும். 37 வயதானாலும் மோட்ரிச் ஓட்டமே குரோஷியாவை காலிறுதி வரை கொண்டு வந்துள்ளது.
ஆனால் நாக் அவுட் சுற்றில் ஜப்பான் அணியிடமே பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பில் தப்பித்து பிழைத்து குரோஷியா வெற்றிபெற்றதால், பிரேசில் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சவாலளிக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்க உள்ள போட்டியில் நெதர்லாந்து அணியை எதிர்த்து வலிமையான அர்ஜென்டினா அணி விளையாட உள்ளது.
நெதர்லாந்து அணி நாக் அவுட் போட்டியில் சுமாராக விளையாடும் அமெரிக்காவை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு வந்துள்ளது.
நெதர்லாந்து அணியின் அட்டாக் முழுக்க டிபாய், டம்பிரிஸை நம்பியே இருக்கிறது. அதேபோல் தடுப்பாட்டத்தில் எந்த அணிக்கும் சவால் அளிக்கும் என்பதால், அர்ஜென்டினா வீரர்களால் அவ்வளவு எளிதாக கோல் அடிக்க முடியாது.
அதேபோல் அர்ஜென்டினா அணியின் அட்டாக் வலிமை அனைவருக்கும் தெரிந்தது என்றாலும், இதுவரை அர்ஜென்டினா அணியின் தடுப்பாட்டத்தின் பலம் முழுமையாக யாருக்கும் தெரியவில்லை.
ஏனென்றால் ஒவ்வொரு ஆட்டத்திலும் முதல் பாதியிலேயே முதல் கோலை அடித்து எதிரணிக்கு கோல் அடிக்க வேண்டிய கட்டாயத்தை அர்ஜென்டினா அணி உருவாக்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் மெஸ்ஸியின் கடைசி உலகக்கோப்பைத் தொடர் என்பதால், இந்தப் போட்டி மீது ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ஓபிஎஸ்க்கு தடை கேட்ட இபிஎஸ்: உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் மனு!
தீவிர புயலாக இருந்த மாண்டஸ் வலுவிழந்தது!