கேரளாவில் அர்ஜென்டினா கால்பந்து சங்கம், கால்பந்து அகாடமியை தொடங்குகிறது. இதற்கான, தொடக்க விழாவில் பங்கேற்க வரும் அர்ஜென்டினா கால்பந்து அணி நட்பு ஆட்டத்தில் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரளாவில் அர்ஜென்டினா கால்பந்து அணிக்காக லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். உலகக் கோப்பை நடைபெறும் ஒரு மாத காலமும் கேரள மாநிலம் விழாக் கோலமாக காணப்படும். அர்ஜென்டினாவா? பிரேசிலா? என்று ரசிகர்கள் இரு பிரிவாக பிரிந்து மோதிக் கொள்ளும் அளவுக்கு களேபரங்கள் அரங்கேறும். இந்த நிலையில், அர்ஜென்டினாவுக்கும் கேரளாவுக்குமுள்ள உறவை வலுப்படுத்தும் வகையில், அங்கு கால்பந்து பயிற்சி மையத்தை அர்ஜென்டினா கால்பந்து சங்கம் அமைக்கிறது.
இது குறித்து கேரள விளையாட்டுத்துறை அமைச்சர் அப்துல்ரகுமான் கூறுகையில், மலப்புரத்தில் கால்பந்து பயிற்சி மையம் அமைக்க அர்ஜென்டினா கால்பந்து சங்க தலைவர் கிளாடியோ தாபியோவுடன் ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதனடிப்படையில், அர்ஜென்டினா கால்பந்து சங்கமே நேரடியாக நடத்தும் பயிற்சி மையம் மலப்புரத்தில் நவீன ஸ்டேடியத்துடன் அமைக்கப்படவுள்ளது.
மலப்புரம் மட்டுமல்லாமல் கேரளாவில் பல நகரங்களில் அர்ஜென்டினா கால்பந்து சங்கம் பயிற்சி மையத்தை தொடங்கவுள்ளது. அர்ஜென்டினா அணி கேரளா வந்து நட்புரீதியான போட்டியில் பங்கேற்கவும் முடிவு செய்துள்ளது. இதற்காக, ஸ்டேடியம் உள்ளிட்ட வசதிகளை ஆய்வு செய்ய நவம்பர் மாதத்தில் அர்ஜென்டினா கால்பந்து சங்க நிர்வாகிகள் கேரளா வரவுள்ளனர். அர்ஜென்டினா அதிகாரிகள் திருப்தியடைந்தால், நட்புரீதியிலான ஆட்டத்தில் பங்கேற்க அர்ஜென்டினா அணி வருகை தரும் என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
மகாவிஷ்ணு சர்ச்சை பேச்சு: தலைமை ஆசிரியருக்கு டிரான்ஸ்பர்!
மூட நம்பிக்கைப் பேச்சாளர் கைது செய்யப்பட வேண்டும்! – ராமதாஸ்