ஃபிபா உலக கால்பந்து போட்டியில் வென்ற பிறகு எங்கள் அணியின் இலக்கை அடைந்து விட்டோம் என்று அர்ஜென்டினா அணியின் கோல் கீப்பர் எமிலியானோ மார்டினஸ் கூறியுள்ளார்.
நேற்று நடைபெற்ற உலக கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியின் பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை அர்ஜென்டினா அணி வீழ்த்தியது.
பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் அர்ஜென்டினா அணி 2 கோல்கள் அடித்து முன்னிலை வகித்தது. இதனால் அர்ஜென்டினா அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,
ஆட்டத்தின் 80 மற்றும் 81 வது நிமிடங்களில் பிரான்ஸ் வீரர் கிலியன் எம்பாப்வே அடுத்ததடுத்து இரண்டு கோல்கள் அடித்து ஆட்டத்தை தன் பக்கம் திருப்பினார்.
ஆட்ட நேர முடிவில் இரண்டு அணிகளும் 3-3 என்று சமநிலை வகித்ததால், பெனால்டி ஷூட் அவுட் முறை பின்பற்றப்பட்டது.
இதில் அர்ஜென்டினா அணியின் கோல் கீப்பர் எமிலியானோ மார்டினஸ் சிறப்பாக விளையாடி பிரான்ஸ் அணி வீரர்களின் கோல்களுக்கு முட்டுக்கட்டை போட்டார். பிரான்ஸ் வீரர் கிலியன் எம்பாப்வே முதலில் கோல் அடித்தார். அடுத்ததாக கிங்ஸ்லி கோமேன் அடித்த ஷாட்டை எமிலியானோ மார்டினஸ் பாய்ந்து சென்று தடுத்தார். பின்னர் சவ்மேனி அடித்த ஷாட் கோல் போஸ்டின் ஓரமாக சென்றது. அடுத்தடுத்த இரண்டு கோல்களை தடுத்ததால், எமிலியானோ மார்டினஸ் நடனம் ஆடினார். இது மைதானத்திலிருந்த அர்ஜென்டினா ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. தொடர்ந்து நான்காவது வாய்ப்பில் மாண்டியல் கோல் அடித்தார்.
அர்ஜெண்டினா அணி பெனால்டி ஷூட் அவுட்டில் எந்த வாய்ப்பையும் இழக்காமல் நான்கு கோல்கள் அடித்து வெற்றி பெற்றது.
எமிலியானோ மார்டினஸ் தடுப்பு அரணாக செயல்பட்டதால், பிரான்ஸ் அணி இரண்டு கோல்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.
இதுகுறித்து அவர் கூறுகையில், “இது மிகவும் கடினமான போட்டியாக இருந்தது. பிரான்ஸ் அணி வீரர்கள் ஆட்டத்தை சமன் செய்ய போராடினர். கஷ்டப்பட்டு இலக்கை அடைய வேண்டும் என்ற முனைப்போடு நாங்கள் செயல்பட்டோம். நான் கனவு கண்டதையெல்லாம் சாதித்துவிட்டேன். என்னிடம் சொல்வதற்கு வார்த்தைகள் ஏதும் இல்லை. பெனால்டி ஷூட் அவுட்டின் போது நான் நிதானமாக விளையாடினேன். நாங்கள் விரும்பியபடி எல்லாம் நடந்தது. இந்த வெற்றியை எனது குடும்பத்திற்கு நான் சமர்ப்பிக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
இறுதிப் போட்டியில் சிறப்பாக ஆடிதால், உலக கோப்பை கால்பந்து தொடரின் சிறந்த கோல் கீப்பருக்கான கோல்டன் கிளவ் விருது எமிலியானோ மார்டினஸ்-க்கு வழங்கப்பட்டது.
செல்வம்
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!