உலகக்கோப்பையை வென்றுகொடுத்த அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் மெஸ்சியை அவரது ரசிகர்கள் கெளரவப்படுத்தி வருகின்றனர்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த டிசம்பர் 18ஆம் தேதி கத்தாரில் பரபரப்பாக நடைபெற்ற கால்பந்தாட்ட உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில், பெனால்டி ஷூட் அவுட் முறையில் பிரான்சை வீழ்த்தி அர்ஜெண்டினா அணி மூன்றாவது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது.
இந்த உலகக்கோப்பையைப் பெற்றுக்கொடுத்த மெஸ்சியை, அவரது ரசிகர்கள் தலைமேல் வைத்து கொண்டாடி வருகின்றனர். தாயகம் திரும்பிய வீரர்களை அந்நாட்டு ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

மேலும், ஃபிஃபா உலகக் கோப்பையை வென்று கொடுத்த மெஸ்ஸியை, கௌரவப்படுத்தும் விதமாக அர்ஜென்டினா குடியரசின் மத்திய வங்கி தங்கள் 1,000 ரூபாய் நோட்டில் லியோனல் மெஸ்ஸியின் படத்தை அச்சடிக்க பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது ஒருபுறமிருக்க, மறுபுறம் அர்ஜென்டினாவில் உள்ள அழகு நிலையங்களிலும் டாட்டூ கடைகளிலும் மெஸ்சியின் ரசிகர்கள் அவர்போல், சிகை அலங்காரம் செய்வதற்கும், அவர் படத்தை உடலில் டாட்டூ போட்டுக் கொள்வதற்கும் இரவுபகலாக வரிசையில் காத்துக் கிடக்கிறார்களாம்.

இதுகுறித்து டாட்டூ நிபுணர் செபாஸ்டியன் ஆர்குயெல்லோ பாஸ், “மெஸ்சி ரசிகர்களில் பலர், இறுதிப் போட்டிக்கு முன்பே என்னை முன்பதிவு செய்திருந்ததால், அவர்கள் எல்லோரும் டாட்டூ போட்டுக்கொண்டனர். அவர்கள் கை, கால்கள் தவிர முதுகு மற்றும் கழுத்தின் பின்புறங்களிலும் மெஸ்சியின் டாட்டூக்களைப் போட்டுக் கொள்கின்றனர்.
அதிலும் மெஸ்சி உலகக்கோப்பையை வென்று கொடுத்த பிறகு, என் கடைக்கு இடைவிடாமல் போன் செய்யும் ரசிகர்கள், ‘தாங்கள் எப்போது ஃப்ரியாக இருப்பீர்கள்’ என கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். உண்மையிலேயே அவரை இதுபோன்று கெளரவிப்பது சிறப்பாகும்” எனத் தெரிவித்துள்ளார்.
ஜெ.பிரகாஷ்
கரும்பை வழங்கி உழவர்கள் வாழ்வில் ஒளியேற்றுக: ராமதாஸ் வலியுறுத்தல்!
எல்லைப் பிரச்சினை: கர்நாடகம்போல் களத்தில் இறங்கிய மராட்டியம்