17 ஆண்டுகளுக்கு பிறகு ஐசிசி டி20 உலகக்கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வென்ற மகிழ்ச்சி நாட்டின் ஒவ்வொரு பக்கத்திலும் கடந்த ஒருவாரமாக எதிரொலித்தது.
கோப்பையை வென்ற சில மணி நேரங்களில் விராட் கோலி, ரோகித், ஜடேஜா மூவரும் டி20 கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்தாலும் அவர்கள் தாங்கள் ஆசைப்பட்ட கோப்பையுடன் ‘குட் பை’ சொல்லியது ‘நீ ஜெய்ச்சிட்ட மாறா’ என்ற சூர்யா பட வசனத்தை ரசிகர்கள் மனதில் இடம்பெற செய்து ஆனந்த கண்ணீரை வரவழைத்தது.
கம்பீரை நியமித்த பிசிசிஐ!
இந்த மகிழ்ச்சிக்கு நடுவே, கடந்த 9ஆம் தேதி இரவில் இந்திய அணி புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீரை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்தது முதல் உலகக்கோப்பை வெற்றியைத் தாண்டி தற்போது வரை அதனை சுற்றியே செய்திகள் பரபரக்க தொடங்கியுள்ளன.
குறிப்பாக கடந்த காலங்களில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய கவுதம் கம்பீரால் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி உச்சத்திற்கு கொண்டு செல்ல முடியுமா? என்று ஒரு பக்கம் கேள்வி எழ, மாடர்ன் கிரிக்கெட்டை உன்னிப்பாக கவனித்து வரும் அவரால் இந்தியாவிற்கு பல்வேறு ஐசிசி கோப்பைகளை வென்று கொடுக்க முடியும் என மற்றொரு பக்கம் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் பயிற்சியாளராக கம்பீரின் அணுகுமுறை மற்றும் நெருக்கடிகள் குறித்து விவாதிப்பதற்கு முன்பு, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஒரு பேட்ஸ்மேனாக அவர் படைத்த சாதனைகளை நாம் காண்போம்.
யார் இந்த கவுதம் கம்பீர்?
புதுடெல்லியில் 1981ஆம் ஆண்டு தீபக் கம்பீர் – சீமா கம்பீருக்கு மகனாக பிறந்தவர் தான் கவுதம் கம்பீர். தந்தை ஜவுளி நிறுவன தொழிலதிபர் என்ற போதிலும், சிறுவயது முதலே இவர் கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டிருந்தார். இளம் வயதிலேயே உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி இந்திய தேர்வுக்குழுவின் கவனத்தை ஈர்த்தார்.
அதன்படி 2003 இல் வங்காளதேசத்திற்கு எதிரான சர்வதேச ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்காக கம்பீர் அறிமுகமானார். அதற்கு அடுத்த ஆண்டே சச்சின், சேவாக், டிராவிட், கங்குலி என மூத்த வீரர்கள் நிரம்பியிருந்த இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்தார்.
கம்பீரின் சாதனைகள்!
2007 உலகக்கோப்பை படுதோல்விக்கு பின்னர் இந்திய அணியின் ஆஸ்தான தொடக்க ஆட்டக்காரராக களம் கண்ட கம்பீர், அதே ஆண்டில் நடைபெற்ற முதல் ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடருக்கு தோனி தலைமையிலான இளம் இந்திய அணியில் இடம்பிடித்தார். அவர் அந்த தொடரில் பேட்டிங்கில் முக்கிய இடம் வகித்ததுடன், பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் 75 ரன்கள் எடுத்தது உட்பட, தொடரில் அதிக ரன்கள் குவித்து இந்திய அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.
இன்னிங்ஸை நங்கூரமிடும் திறனுக்காக அறியப்பட்ட கம்பீர் 2009 ஆம் ஆண்டில் ஐசிசியின் சிறந்த டெஸ்ட் வீரர் விருது பெற்றார்.
தொடர்ந்து 2011 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் இலங்கைக்கு எதிரான இறுதிப் போட்டியில் அவர் கேப்டன் தோனியுடன் முக்கியமான பார்ட்னர்ஷிப்பை உருவாக்கி, 97 ரன்கள் குவித்தார். இதன்மூலம் இந்திய அணி 28 ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பையை கையில் ஏந்த பெரும் பங்கு வகித்தார்.
ஆனால் 2012ஆம் ஆண்டுக்கு பிறகு சர்வதேச போட்டிகளில் சரிவை சந்தித்த அவர், 2018ஆம் ஆண்டு அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இந்தியாவுக்காக 58 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 9 சதங்கள் மற்றும் 22 அரைசதங்கள் உட்பட 41.95 சராசரியில் 4154 ரன்கள் எடுத்தார். 147 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 39.68 சராசரியுடன் 11 சதங்கள் மற்றும் 34 அரைசதங்கள் உட்பட 5,238 ரன்கள் எடுத்தார்.
இதற்கிடையே ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியின் கேப்டனாக இருந்த கம்பீர் 2012 மற்றும் 2014 இல் இரண்டு ஐபிஎல் பட்டங்களை வென்றெடுத்தார். மேலும் 2024 ஐபிஎல் போட்டியில் அந்த அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்று கொல்கத்தா அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லவும் சிறப்பாக வழிகாட்டினார்.
இந்த நிலையில் டி20 உலகக்கோப்பை வென்று சர்வதேச அரங்கில் சாம்பியன் அணியாக உள்ள இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு கம்பீர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தமிழரை தோற்கடித்த கம்பீர்!
ராகுல் டிராவிட் சமீபத்தில் முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரை வென்று சாம்பியன் கோப்பையுடன் ஓய்வு பெற்ற நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு பிசிசிஐ ஆட்களை தேடியது.
பல கட்ட ஆலோசனைக்கு பிறகு இறுதிப்பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளருமான தமிழ்நாட்டைச் சேர்ந்த டபிள்யூ. வி. ராமனும், கவுதம் கம்பீரும் இருந்தனர்.
கிரிக்கெட்டில் ராமனுக்கு மிகப்பெரும் அனுபவம் இருக்கிறது என்றாலும், நவீனகால கிரிக்கெட்டை நன்றாக அறிந்து வைத்துள்ளவர் என்ற முறையில் கம்பீர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதன்மூலம் இந்திய கிரிக்கெட் அணியின் 26வது தலைமை பயிற்சியாளராக கம்பீர் பொறுப்பேற்றுள்ளார்.
கம்பீரின் வாக்குறுதி என்ன?
இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்தியா எனது அடையாளம் மற்றும் எனது நாட்டிற்கு சேவை செய்வது எனது வாழ்க்கையின் மிகப்பெரிய பாக்கியமாகும். இப்போது பயிற்சியாளர் என்ற வித்தியாசமான தொப்பி அணிந்திருந்தாலும், திரும்பி வந்ததில் பெருமைப்படுகிறேன். ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டும் என்பதே எனது குறிக்கோள். 1.4 பில்லியன் இந்தியர்களின் கனவுகளை நமது வீரர்கள் நனவாக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்!” என்று தெரிவித்துள்ளார்.
கம்பீருக்கு காத்திருக்கும் சவால்கள்!
கம்பீரின் இந்த வாக்குறுதி இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலத்திற்கு அத்தனை முக்கியமானது என்றாலும், அவர் அடுத்து எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியிலும் அதிக கவனம் தேவை என்பதே உண்மை. அவர் நினைத்தபடி உலகக்கோப்பைகளை இந்திய அணி வெல்ல அவருக்கு நெருக்கடிகளும் சவால்களும் வரிசைக்கட்டி காத்திருக்கின்றன.
அவை,
நட்சத்திர வீரர்களை கையாளுதல்!
அணியில் இருக்கும் ரோகித், கோலி போன்ற வலிமையான ஆளுமை கொண்ட நட்சத்திர வீரர்களை கையாள்வது அவருக்கு சவாலானதாக இருக்கும். கோப்பையை வென்றெடுக்க வீரர்களிடையே நல்லுறவை பேணுவது மிக முக்கியம்.
அனுபவமும், துடிப்பும் முக்கியம்!
டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியை பொறுத்தவரை மூத்த வீரர்களின் அனுபவமும், இளம் வீரர்களின் துடிப்பும் ஒருசேர தேவை. இந்திய கிரிக்கெட் அணிக்கு இதில் நீண்ட அனுபவம் உள்ளது. எனவே எதிர்காலத்தில் மூத்த வீரர்கள் மற்றும் இளம் வீரர்கள் மூலம் அணியில் எப்படி வெற்றியை தக்கவைக்கிறார் என்பது முக்கியமானதாக பார்க்கப்படும்.
புதுமையை கண்டறிதல்!
இந்திய கிரிக்கெட் நீண்ட வரலாறு மற்றும் பாரம்பரியம் கொண்டது. அதேவேளையில் நவீன கிரிக்கெட் போக்குகளுக்கு ஏற்றவாறு புதுமைகளை உருவாக்கி, செயல்படுத்த வேண்டியது ஒரு பயிற்சியாளரின் முக்கிய கடமையாக பார்க்கப்படுகிறது.
பல மொழி பேசும் வீரர்கள்!
முன்னாள் பாஜக எம்.பியாக இருந்த அவருக்கு, பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் பல்வேறு மொழி பேசும் வீரர்களிடையே ஒற்றுமையை பேணுவது சவாலானதாக இருக்கும். எனினும் இந்திய அணியின் முன்னாள் வீரர் என்ற முறையில் அதற்கான அனுபவத்தை பெற்றிருப்பார் என்பதை நிச்சயம் நம்பலாம்.
வீரர்களின் பணிச்சுமையை குறைத்தல்!
தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் விளையாடி வருவதால், வீரர்கள் சோர்வடைவது இயல்பு. எனவே அதற்கு ஏற்றார் போல் அவர்களுக்கு ஓய்வு அளிப்பது, உடல், மன ஆரோக்கியத்தை கண்காணிப்பது மற்றும் சர்வதேச போட்டி அட்டவணையை கவனித்து வீரர்களை தயார்படுத்துவது ஆகியவை கம்பீரின் முக்கியமான பொறுப்பாக இருக்கும்.
140 கோடி இந்தியர்கள் கனவு நிறைவேறுமா?
இந்திய அணி உலகக்கோப்பை வெல்ல வேண்டும் என்பது மைதானத்தில் விளையாடும் 11 பேரின் கனவு மட்டுமல்ல. ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் கனவு. இந்த நிலையில் உலகக்கோப்பையை வென்றெடுத்த அணியுடன் பயிற்சியாளர் பொறுப்புக்கு வந்துள்ள கம்பீரின் வழிகாட்டுதலில் இந்திய அணி அடுத்தடுத்து கோப்பைகளை வெல்ல வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு. அதனை அவர் எப்படி நிறைவேற்ற போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
வரும் அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்திய ஆடவர் அணி 50 ஓவர் சாம்பியன்ஸ் டிராபி(2025), உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (2025) டி20 உலகக்கோப்பை(2026), 50 ஓவர் உலகக்கோப்பை (2027) என முக்கிய ஐசிசி தொடர்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஊடக அழுத்தத்தை எதிர்கொள்ள வேண்டும்!
ஊடகங்களின் வியாபார கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே பயிற்சியாளர் – செய்தியாளர் சந்திப்புகளில் ஊடகவியலாளர்களின் அதிரடியான கேள்விகளுக்கு நிதானமாக பதிலளிப்பது முக்கியது. இல்லையென்றால் அதுவே தலைப்பு செய்தியாக வெளியாகி கம்பீருக்கு நெருக்கடியை ஏற்படுத்தும். அது இந்திய அணியிலும் எதிரொலிக்கும்.
ஏனெனில் கடந்த காலங்களில் களத்திலும் சரி, செய்தியாளர்கள் சந்திப்பிலும் சரி கம்பீரின் கட்டற்ற கோபத்தை கண்ட ரசிகர்கள் அப்படியே மீம்ஸ்களாக்கி சமூகவலைதளங்கில் பதிவு செய்துள்ளதை நாம் எளிதாக காண முடியும்.
சர்வதேச களத்தில் பாகிஸ்தானின் ஷாஹித் அப்ரிடி, கம்ரன் அக்மல், ஐபிஎல் தொடரில் ஷேன் வாட்சன், விராட் கோலி மற்றும் போட்டி நடுவர்களுடன் மோதலில் ஈடுபட்ட சம்பவங்கள் அவர் மீதான மரியாதையை ரசிகர்கள் மத்தியில் குறைத்தது கவனிக்கத்தக்கது.
மின்னம்பலம் சர்வே!
இந்த நிலையில் நேற்று (ஜூலை 10) நமது மின்னம்பலம் தளத்தில், “ஏற்கெனவே பல சர்ச்சைகளில் சிக்கிய கவுதம் கம்பீர், இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருப்பது” குறித்து வாசகர்களின் கருத்தை கேட்டோம்.
அதில் 56 சதவீதம் பேர் ’வேறு பயிற்சியாளரை நியமித்திருக்கலாம்’ என்றும், 44 சதவீதம் பேர் ’மீண்டும் சர்ச்சைகள் தான் உருவாகும்’ என்றும், 22 சதவீதம் பேர் ‘இந்திய அணியை வெற்றிகரமாக வழிநடத்துவார்’ என்றும் தெரிவித்துள்ளனர்.
இதில் பெரும்பாலான வாசகர்களின் கருத்துகள் கம்பீருக்கு எதிரானதாக இருந்தாலும், ‘இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர்’ பொறுப்பில் அவர் எப்படி செயல்படுகிறார் என்பதை வரும் நாட்களில் நிச்சயம் தெரிந்து கொள்ளலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
கனமழைக்கு வாய்ப்பு : எந்தெந்த மாவட்டங்களில்?