ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் இருந்து இந்தியா வெளியேறி உள்ளது. இதனையடுத்து அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 50 ஓவர் உலகக்கோப்பை போட்டிக்காக இந்திய அணி தயாராக வருகிறது.
கேப்டனாக பொறுப்பேற்கும் ஹர்திக்
அதன்படி இந்த மாதம் மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட இந்திய அணி நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.
வரும் 18ம் தேதி தொடங்கும் டி20 தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து நவம்பர் 25 முதல் 30ம் தேதி வரை நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு ஷிகர் தவான் கேப்டனாக இருப்பார்.

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு!
நியூசிலாந்துக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி மற்றும் அஸ்வின் உள்ளிட்ட பல மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்திய அணியில் சுப்மன் கில், இஷான் கிசன், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், உம்ரான் மாலிக் உள்ளிட்ட இளம் வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
டிராவிட்டுக்கு ஓய்வு!
அதேபோல் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரவிருக்கும் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் விவிஎஸ் லட்சுமண் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்க உள்ளார்.

லைவ் ஸ்ட்ரீமிங்கில் இறங்கிய அமேசான்!
இந்தியா – நியூசிலாந்து தொடரை நேரடியாக ஒளிபரப்பும் உரிமையை அமேசான் பிரைம் பெற்றுள்ளது. அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்,
”கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தைக் கொண்டு வர, மொழி தேர்வாளர் மற்றும் “ரேபிட் ரீகேப்” போன்ற சில புதிய அம்சங்கள் சேனலால் பயன்படுத்தப்படும்.
ஆங்கிலத்துடன் இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் உட்பட ஐந்து மொழிகளில் வர்ணனை மற்றும் கிராபிக்ஸ் மூலம் இந்தியாவில் உயர்தர பார்வையை ரசிகர்கள் அனுபவிப்பார்கள்.
பிரைம் வீடியோ வர்ணனைக் குழுவில் ரவி சாஸ்திரி, ஹர்ஷா போக்லே, ஜாகீர் கான், அஞ்சும் சோப்ரா, குண்டப்பா விஸ்வநாத், வெங்கட்பதி ராஜு போன்றவர்களும்,
தமிழ் வர்ணனையில் ஹேமங் பதானி, வி.ராமன், ஸ்ரீராம், லக்ஷ்மன் உள்ளிட்டோர் இடம்பெறுவார்கள். நேரடி ஒளிபரப்பில் போட்டிகளின் முந்தைய, நடு மற்றும் பிந்தைய நிகழ்ச்சிகளும் வெளியிடப்படும்” என்று தெரிவித்துள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
அடுத்த கனமழை: தேதி சொன்ன வெதர்மேன்!
சீர்காழியில் பேய் மழை : நீரில் மூழ்கிய வீடுகள்!