பாரீஸ் ஒலிம்பிக்கில் ஆடவர் 57 கிலோ பிரிவில் இந்திய மல்யுத்த வீரர் அமன் ஷெராவத் நேற்றிரவு வெண்கலம் வென்றார்.
ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற இளம் வீரர் என்ற பெருமையும் இவருக்கு கிடைத்தது. அதாவது, ஒலிம்பிக் போட்டியில் 21 ஆண்டுகள் 24 நாட்களில் தாய் நாட்டுக்காக இவர் பதக்கம் வென்று கொடுத்துள்ளார்.
இந்த நிலையில், அமன் பற்றி வியக்கத்தக்க தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வியாழக்கிழமை நடந்த அரையிறுதியில் தோல்வியடைந்த பிறகு, அமன் 61.5 கிலோ எடை இருந்தார். அதாவது, கிட்டத்தட்ட 4.6 கிலோ எடை அதிகரித்திருந்தது.
இது பயிற்சியாளர்கள் வயிற்றில் கிலியை ஏற்படுத்தியது. ஏற்கனவே வினேஷ் போகத் 100 கிராம் அதிக எடை இருந்ததற்காக போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தது வேறு அவர்களின் நினைவுக்கு வந்து போனது.
இதையடுத்து, வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு போட்டி முடிந்த பிறகு இரவு முழுவதும் அமனுக்கு 6 பயிற்சியாளர்கள் இணைந்து கடும் பயிற்சி கொடுத்தனர். இரண்டு பயிற்சியாளர்கள் மாறி மாறி மல்யுத்த பயிற்சியில் அவருடன் ஈடுபட்டனர். அதோடு, வெண்ணீர் குளியல் எடுக்க வைக்கப்பட்டார். பின்னர் ,டிரெட் மில்லில் ஓட்டம் முடிந்த பிறகு, சனா குளியல் 5 முறை கொடுக்கப்பட்டது.
லேசான ஜாக்கிங் எடுத்த பிறகு, கடைசியாக 15 நிமிடங்கள் அமன் வேகமான ஓட்டத்தில் ஈடுபட்டார். அதன் பிறகே, அவரின் உடல் எடை சரியாக 56.9 கிலோ என்கிற அளவை எட்டியது. இதற்கு பிறனே, பயிற்சியாளர்களால் மூச்சு விட முடிந்தது.
அதாவது, சுமார் 10 மணி நேரத்தில் அமன் 4.6 கிலோ எடையை குறைத்திருந்தார் . அதன் பிறகும் அமன் உறங்கவில்லை. ஒவ்வொரு 1 மணி நேரத்துக்கும் அமனின் உடல் எடை பரிசோதித்து பார்க்கப்பட்டது.
பயிற்சியின் போது அமனுக்கு லிக்வார்ம் வாட்டர், எலுமிச்சை,தேன் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இறுதியாக வெள்ளிக்கிழமை இரவு 9.45 மணியளவில் நடந்த வெண்கலத்துக்கான பிளே ஆப் போட்டியில் பியுரிடினோ ரிகோ வீரர் டாரியனை வீழ்த்தி வெண்கலத்தை வென்றார் அமன்.
– எம். குமரேசன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரேசில் விமான விபத்து… 61 பேர் பலியான சோகம்!
முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ ரெய்டு!