2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில், மல்யுத்த போட்டிகளில் இந்தியா சார்பில் 6 பேர் களமிறங்கினர். அதில், ஆடவர் பிரீஸ்டைல் 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியா சார்பில் அமன் ஷெராவத் களமிறங்கினர்.
இவருக்கான ஆட்டங்கள் ஆகஸ்ட் 8 அன்று துவங்கிய நிலையில், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் வடக்கு மசிடோனியாவை சேர்ந்த விளாடிமிர் எகோரோவ்வை அமன் ஷெராவத் எதிர்கொண்டார்.
இப்போட்டியில், துவக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய அமன் ஷெராவத், எகோரோவ்வுக்கு ஒரு புள்ளி கூட வழங்காமல் 10-0 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.
இதை தொடர்ந்து, காலிறுதியில் அமன் ஷெராவத் அல்பேனியாவை சேர்ந்த ஜெலிம்கான் அபகரோவ்வை எதிர்கொண்டார். முதல் சுற்றில் அமன் ஷெராவத் காட்டிய ஆதிக்கம் காலிறுதியிலும் தொடர்ந்தது.
ஜெலிம்கான் அபகரோவ்வை 11-0 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்திய அமன் ஷெராவத் எளிமையாக அரையிறுதிக்கு முன்னேறினார்.
இதை தொடர்ந்து, அரையிறுதியில் எளிதாக வெற்றி பெற்று, அமன் ஷெராவத் இந்தியாவுக்கு பதக்கத்தை உறுதி செய்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், அரையிறுதியில் ஜப்பானின் ரெய் ஹிகுசியை எதிர்கொண்ட அமன் ஷெராவத், 0-10 புள்ளிகள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
இந்நிலையில், ஆகஸ்ட் 9 அன்று நடைபெற்ற வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டத்தில் களமிறங்கிய அமன் ஷெராவத், போர்ட்டோ ரிக்கோ நாட்டை சேர்ந்த டெரியன் டாய் க்ரூஸை எதிர்கொண்டார்.
இந்த போட்டியின் முதல் பாதியில், இருவருமே ஒருவருக்கொருவர் கடுமையாக எதிர்கொண்ட நிலையில், 5-3 என போட்டி மிக நெருக்கமாக சென்றது. ஆனால், 2வது பாதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அமன் ஷெராவத், 13-5 என்ற வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.
இதன்மூலம், 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் அமன் ஷெராவத் வெண்கலப் பதக்கத்தை வென்றார். இந்த தொடரில், இந்தியா வெல்லும் 6வது பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம், 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் தொடரிலிருந்து, ஒவ்வொரு ஒலிம்பிக் தொடரிலும் மல்யுத்த விளையாட்டில் இந்தியா ஒரு பதக்கத்தையாவது வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக வெண்கலப் பதக்கம் வென்ற சுஷில் குமார், 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றார். அதே லண்டன் ஒலிம்பிக்கில் யோகேஸ்வர் தத் வெண்கலப் பதக்கம் வென்றார்.
பின், 2016 ரியோ ஒலிம்பிக்கில் சாக்ஷி மாலிக் வெண்கலப் பதக்கம் வென்றார். 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில், ரவி தஹியா வெள்ளிப் பதக்கத்தையும், பஜ்ரங் புனியா வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: எலுமிச்சை மஷ்ரூம் பீஸ் சேமியா புலாவ்
சோகமா இருக்காறாம் : அப்டேட் குமாரு
‘கனா காணும் காலங்கள்’ சீசன் 3 : விரைவில் ஓடிடி வெளியீடு!
“கோயிலைப் பூட்டி வைப்பது, சாமியை சிறை வைப்பதற்கு சமம்” : நீதிபதி கண்டனம்!