22-வது பிபா உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் இன்று (நவம்பர் 20) கோலாகலமாகத் துவங்குகிறது.
கத்தார் உலககோப்பை!
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் பிபா உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் பிரான்ஸ் வெற்றி பெற்றது.
கால்பந்து உலக கோப்பை போட்டியை நடத்துவதற்காக கத்தார் அரசு 220 பில்லியன் டாலர் செலவழித்துள்ளது. அங்கு புதிதாக 6 கால்பந்து விளையாட்டு மைதானங்களை கட்டியுள்ளது. கால்பந்து போட்டிகளை காண இதுவரை 30 லட்சம் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளது.
நடப்பு சாம்பியனான பிரான்ஸ், பிரேசில், போர்ச்சுக்கல், அர்ஜெண்டினா, இங்கிலாந்து, உள்ளிட்ட 32 அணிகள் கால்பந்து போட்டியில் விளையாட உள்ளனர்
அல் பைக் மைதானத்தில் இன்று நடைபெறக்கூடிய போட்டியில் இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு கத்தார் – ஈக்வடார் அணிகள் மோதுகின்றன.
அணிகள் விவரம்!
குரூப் ஏ – கத்தார், ஈகுவடார், செனெகல், நெதர்லாந்து
குரூப் பி – இங்கிலாந்து, ஈரான், அமெரிக்கா, வேல்ஸ்
குரூப் சி – அர்ஜெண்டினா, சௌதி அரேபியா, போலந்து, மெக்ஸிகோ
குரூப் டி – ஃபிரான்ஸ், ஆஸ்திரேலியா, டென்மார்க், துனிசியா
குரூப் இ – ஸ்பெயின், கோஸ்டாரிக்கா, ஜெர்மனி, ஜப்பான்
குரூப் எஃப் – பெல்ஜியம் ,கனடா, , மொராக்கோ, குரோஷியா
குரூப் ஜி – பிரேசில், செர்பியா, சுவிட்சர்லாந்து, கேம்ரூன்
குரூப் ஹெச் – போர்ச்சுகல், கானா, உருகுவே, தென்கொரியா
ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் உள்ளன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற மூன்று அணிகளுடன் மோத வேண்டும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இரண்டாவது சுற்றுக்கு செல்லும்.
அதன்படி, 16 அணிகள் இரண்டாவது சுற்றுக்கு தேர்வாகும். பின்னர் வெளியேற்றுதல் சுற்று நடைபெற்று, கால் இறுதி, அரை இறுதி போட்டிகளைக் கடந்து இறுதிப் போட்டி நடைபெறும்
பரிசுத்தொகை!
பிபா உலக கோப்பை பரிசுத்தொகை 440 மில்லியன் டாலர், இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.3,586 கோடி ஆகும்.
வெற்றி பெறும் அணிக்கு ரூ.344 கோடி பரிசாக வழங்கப்படும். மேலும் 5 கிலோ தங்கத்திலான பிபா கோப்பையும் வழங்கப்படும்.
இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.245 கோடி, மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.220 கோடி, 4-ஆம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.204 கோடி வழங்கப்படும்.
கால் இறுதி சுற்றுடன் வெளியேறும் 4 அணிகளுக்கு தலா ரூ.138 கோடி, 2-வது சுற்றுடன் வெளியேறும் 8 அணிகளுக்கு தலா ரூ.106 கோடி, லீக் சுற்றுடன் வெளியேறும் 16 அணிகளுக்கு தலா ரூ.74 கோடி வழங்கப்படும்.
ரசிகர்களுக்கு கட்டுப்பாடு!
கத்தார் இஸ்லாமிய நாடு என்பதால் ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
கத்தார் நாட்டில் ஓரினச்சேர்க்கை உறவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஓரினச் சேர்க்கையாளர்கள் வானவில் கொடியை போட்டி நடைபெறும் மைதானங்களில் கொண்டு வர தடை செய்யப்பட்டுள்ளது.
பெண்கள் நாகரீக உடையில் போட்டிகளை காண வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிகினி உடைகளில் போட்டியைக் காண வந்தால் அவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று கத்தார் அரசு தெரிவித்துள்ளது.
போட்டி நடைபெறும் மைதானங்களில் ரசிகர்களுக்கு மதுபானம் வழங்க தடை செய்யப்பட்டுள்ளது.
செல்வம்
உலகக்கோப்பை கால்பந்து: 12,000 இணையதளங்களுக்கு தடை!
உக்ரைன் மக்களின் துணிச்சல் உலகத்துக்கே உத்வேகம்: ரிஷி சுனக்