டெஸ்ட் போட்டிகளில் வேகமாக 450 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது பந்துவீச்சாளர் என்ற சாதனையை இந்தியாவின் ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் பலத்த எதிர்ப்பார்ப்புக்கு இடையே இன்று (பிப்ரவரி 9) தொடங்கிய பார்டர் கவாஸ்கர் கோப்பையின் முதல் டெஸ்ட் தொடரில் ஆரம்பம் முதலே அனல் பறந்து வருகிறது.
டாஸ் வென்று களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னரும், உஸ்மான் கவாஜாவும் வந்த வேகத்திலேயே தலா 1 ரன்னில் ஷமி, சிராஜ் வேகத்தில் தாக்குபிடிக்க முடியாமல் பெவிலியன் திரும்பினர்.
சுழற்பந்து வீச்சுக்கு சாதகம் என்று கணிக்கப்பட்ட ஆடுகளத்தில் இந்தியாவின் வேகப்பந்து வீச்சு தொடக்கத்திலேயே அதிர்ச்சி கொடுத்தது.
எனினும் அடுத்த மூன்று விக்கெட்டுகளை 6 மாதங்களுக்குப் பின்னர் சர்வதேச போட்டிக்கு திரும்பிய ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா பறித்தார்.
அதுவரை விக்கெட்டுகள் எடுக்காமல் இருந்த மற்றொரு ஆல்ரவுண்டர் அஸ்வின், நன்றாக விளையாடி வந்த அலெக்ஸ் கேரியை (36) போல்டாக்கி சர்வதேச அரங்கில் தனது 450வது விக்கெட்டை பெற்றார்.
இந்த சாதனையை 89 இன்னிங்ஸ்களில் எட்டியுள்ளார். இதன்மூலம் டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 450 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது பந்துவீச்சாளர் என்ற சாதனையை அஸ்வின் படைத்துள்ளார்.
இந்த சாதனையில் 450 விக்கெட்டுகளை 80 இன்னிங்ஸ்களில் எடுத்து இலங்கையின் புகழ்பெற்ற ஆஃப் ஸ்பின்னர் முத்தையா முரளிதரன் முதலிடத்தில் உள்ளார்.
அதேவேளையில் 450 விக்கெட்டுகளை வேகமாக எடுத்த முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை அஸ்வின் தனதாக்கியுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே 93 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையைப் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 450 விக்கெட் + 3,000 ரன்கள் எடுத்த மூன்றாவது வீரர் என்ற பெருமைக்கும் ஆல்ரவுண்டர் அஸ்வின் சொந்தக்காரராகியுள்ளார்.
முன்னதாக ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஷேன் வார்னே, இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் ஏற்கனவே இந்த மைல்கல்லை கடந்துள்ளனர்.
முதல் டெஸ்ட் போட்டியில் ஆரம்பம் முதலே அபாரமான பந்துவீச்சினை இந்தியா வெளிப்படுத்தி வருகிறது. உணவு இடைவேளை முடிவில் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 177 ரன்கள் குவித்து நெருக்கடியான நிலையில் விளையாடி வருகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
ஈஷா யோகா சிவராத்திரி: திரவுபதி முர்மு வருகை!
அதானி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை!