உலகக்கோப்பையில் அர்ஜென்டினா இனி விளையாடும் அனைத்து போட்டிகளும் இறுதிப் போட்டி தான் என்று நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.
விறுவிறுப்பாக நடந்து வரும் கத்தார் உலகக்கோப்பையில் முதல் போட்டியில் சவுதி அரேபியாவிடம் 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டது அர்ஜென்டினா.
அந்த அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி விளையாடும் கடைசி உலகக்கோப்பை என்பதால் முதல் தோல்வியினால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அதனை தொடர்ந்து வாழ்வா சாவா என்ற நேற்றைய ஆட்டத்தில் மெக்சிகோவை எதிர்கொண்ட அர்ஜென்டினா 2-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
இதில் 64வது நிமிடத்தில் மெஸ்ஸி அடித்த அட்டகாசமான கோலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த போட்டியில் வெற்றி பெற்றாலும், வரும் டிசம்பர் 1ம் தேதி நடக்க இருக்கும் போலாந்து அணிக்கு எதிரான ஆட்டம் தான் அர்ஜென்டினாவின் அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்யும்.
போராட்டத்தை விடமாட்டோம்!
இந்நிலையின் இன்று (நவம்பர் 17) செய்தியாளர்களை மெஸ்ஸி சந்தித்தார். அப்போது, ”சவுதி அரேபியாவுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்வியை மனதில் பதித்துள்ளோம். அந்த கடினமான சூழலை மாற்றுவதற்கு நாங்கள் ஆர்வமாக இருந்தோம்.
அதனால் மெக்ஸிகோ அணிக்கு எதிரான போட்டியை இறுதிப் போட்டி என்று நினைத்து விளையாடினோம். இறுதியில் வெற்றி பெற்றோம். இன்னும் 2 நாட்களில் மற்றொரு போட்டியில் விளையாட உள்ளோம்.
அர்ஜென்டினா அணி போராட்டத்தை கைவிடாது. மீதமுள்ள அனைத்து போட்டிகளும் எங்களுக்கு இறுதிப் போட்டி போன்றது தான். அதில் குழப்பம் இல்லை.” என்று தெரிவித்துள்ளார்.
சாதனை சமன்
கத்தார் உலகக்கோப்பையில் 2 கோல்கள் அடித்துள்ள மெஸ்ஸி, உலகக்கோப்பையில் அதிகபட்சமாக 8 கோல்கள் அடித்துள்ள சக போட்டியாளர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் ஜாம்பவான் டியாகோ மாரடோனாவின் சாதனையை சமன் செய்துள்ளார்.
ஆட்டத்தில் அனல் பறக்கும்!
அதேவேளையில் முதல் போட்டியில் மெக்சிகோவுடன் கோல் அடிக்காமல் டிரா செய்த போலாந்து அணி, சவுதிக்கு எதிரான ஆட்டத்தில் 2-0 என்ற கணக்கில் வெற்றிபெற்றுள்ளது.
எனவே வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இரு அணிகளும் வரும் டிசம்பர் 1ம் தேதி போராடும் என்பதால் அர்ஜென்டினா – போலாந்து ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பது மறக்க முடியாத உண்மை.
கிறிஸ்டோபர் ஜெமா
யாருடன் கூட்டணி? : டிடிவி தினகரன் சூசகம்!
உதயநிதி பிறந்தநாள்: மெரினாவில் படகு போட்டி!