ரஹானே: ஐபிஎல் அதிரடியால் அடையாளத்தை மீட்டெடுத்த நம்பிக்கை நாயகன்!

Published On:

| By christopher

இந்தியாவின் கிரிக்கெட் திருவிழாவாக பார்க்கப்படும் ஐபிஎல், அதில் விளையாடும் ஒவ்வொரு வீரர்களின் வாழ்க்கையிலும் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. ஏனெனில் ஐபிஎல் தொடங்காதவரை முதல்தர கிரிக்கெட் போட்டிகள் மட்டுமே ஒரு வீரரின் திறமையை அளவிடும் களமாக இருந்து வந்தது. ஆனால் ஐபிஎல் தொடர் வந்த பிறகு ஒவ்வொரு ஆண்டும் பல அற்புதமான வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவின் அடையாளமாய் மாறி வருகின்றனர்.

ரவீந்திர ஜடேஜா, பும்ரா, சஹால், ஹர்திக் பாண்டியா, நடராஜன், உம்ரான் மாலிக், சூர்யா குமார் யாதவ் என இந்த பட்டியல் நீள்கிறது. அந்தவரிசையில் இந்த ஆண்டில் இணைந்துள்ளவர் தான் அஜிங்க்யா ரஹானே. எனினும் முன்பு பட்டியலிடப்பட்ட வீரர்களை விட ரஹானே வேறுபட்டவர். இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் விஸ்வரூபமெடுத்துள்ள ரஹானேவின் எழுச்சி ரசிகர்களுக்கு புத்தெழுச்சியாக அமைந்துள்ளது என்றால் அது சற்றும் மிகையல்ல!

கிரிக்கெட் தான் உயிர்!

மும்பையின் டோம்பிவ்லி புறநகர்ப் பகுதியில் நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்தவர் அஜிங்க்யா ரஹானே. தனது 17 வயது முதல் கிரிக்கெட்டை உயிராக கருதி ஜூனியர் கிரிக்கெட் மற்றும் ரஞ்சி டிராபி என மட்டை உலகில் தனது பயணத்தை தொடங்கினார். ரஞ்சி தொடரின் 2வது சீசனில் 1089 ரன்களைக் குவித்த ரஹானே முதல் தர கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்து இந்திய சீனியர் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்தார்.

2011ஆம் ஆண்டு இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, ஒரு போட்டியில் கூட வெல்லமுடியாமல் பரிதாபமாக தோற்றது. எனினும், சொதப்பிய மற்ற இந்திய வீரர்களுக்கு மத்தியில், தனது முதல் அறிமுக டி20 போட்டியிலேயே அதிரடியாக 61 ரன்கள் குவித்து கவனம் ஈர்த்தார் ரஹானே.

பின்னர் வி.வி.எஸ்.லக்ஷ்மண், ராகுல் டிராவிட் போன்ற ஜாம்பவான்கள் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, 2013 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்தார்.

வெளிநாட்டில் தேவ தூதன்!

அறிமுக டெஸ்ட் போட்டியில் சொதப்பினாலும் அதன்பின்னர் வெளிநாட்டில் நடைபெற்ற பல்வேறு ஆட்டங்களில் இந்திய அணியின் தேவ தூதனாக களம் கண்ட ரஹானே வெற்றியை உறுதி செய்துள்ளார்.

அவரின் டெக்னிக்கல், பேலன்ஸ் மற்றும் அவரது கச்சிதமான ஷாட் டைமிங் ஆகியவை மற்ற வீரர்களிடம் இருந்து அவரை வேறுபடுத்தியது. 2014ஆம் ஆண்டு நியூசிலாந்தில் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தில் 118 ரன்களுடன் தனது முதல் சர்வதேச டெஸ்ட் சதத்தை அடித்தார்.

தொடர்ந்து 82 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரஹானே 12 சதங்களுடன் 4,931 ரன்கள் குவித்துள்ளார். 90 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 3 சதங்களுடன் 2,962 ரன்களும், 20 டி20 போட்டிகளில் விளையாடி 375 ரன்களும் குவித்துள்ளார்.

அஸ்தமனமான ரஹானே கேரியர்?

எனினும் 2015ம் ஆண்டு முதல் அதிக டாட் பாலை எதிர்கொண்டதன் காரணமாக இந்திய ஒருநாள் அணியில் இருந்து அவ்வப்போது நீக்கப்பட்டார். பின்னர் ரோகித் சர்மா, ஷிகர் தவான், கே.எல் ராகுல் ஆகியோரின் வருகையால் 2017 ஆம் ஆண்டில் இருந்து ஒருநாள் போட்டிகளில் ரஹானே நிரந்தரமாக ஒதுக்கி வைக்கப்பட்டார். மேலும் 15 டெஸ்ட் போட்டிகளில் சதம் அடிக்க முடியாமல் திணறிய ரஹானே 2022ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த தொடருக்குப் பிறகு இந்திய டெஸ்ட் அணியில் இருந்தும் நீக்கப்பட்டார்.

இதற்கிடையே பல வீரர்கள் திறமையைக் காட்டும் ஐபிஎல் தொடரிலும் கடந்த சில ஆண்டுகளாகவே கடும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார் என்றாலும், 2012 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி தனது முதல் ஐபிஎல் சதத்துடன் 560 ரன்கள் குவித்து கிரிக்கெட் உலகில் முக்கிய கவனம் பெற்றார். தொடர்ந்து 2016ஆம் ஆண்டுவரை சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய அவர் சர்வதேச அளவில் கவனித்தக்க வீரராகவும் உயர்ந்தார்.

எனினும் அடுத்தடுத்த ஆண்டுகளில் படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஹானே 2020ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் ஒரு அரைசதம் அடிக்க கூட முடியாமல் தவித்தார்.

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் இடம்பெற்ற அவர் 7 போட்டிகளில் விளையாடி 133 ரன்கள் மட்டுமே குவித்தார். இதனால் கொல்கத்தா அணியும் கழற்றி விட, அஜிங்கியா ரஹானேவின் கிரிக்கெட் வாழ்க்கை அஸ்தமனமானதாகவே பார்க்கப்பட்டது.

ரஹானேவின் விஸ்வரூபம்!

இந்நிலையில் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ரஹானேவை 50 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுத்தது சிஎஸ்கே அணி. ஏற்கெனவே ’டேடிஸ் ஆர்மி’ என்று ரசிகர்களால் கிண்டல் செய்யப்படும் ’சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மேலும் ஒரு 30+ வீரர் சேர்ந்துள்ளார்’ என்றும், ’எதற்கு இந்த தேவையில்லாத ஆணி’ என்றும் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கொஞ்சம் சத்தமாகவே கதறினர்.

அதுபோலவே யோசித்த சென்னை அணியும், நடப்பு தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களில் ரஹானேவுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பளிக்கவில்லை. மும்பைக்கு எதிரான மூன்றாவது ஆட்டத்தில் ஆல்ரவுண்டர் மொயீன் அலி காயம் காரணமாக களமிறங்கவில்லை. அவருக்கு பதிலாக ரஹானேவை களமிறக்க முடிவு செய்தார் தோனி. இந்த வாய்ப்புக்காகவே இவ்வளவு நேரம் காத்திருந்தது போல் அந்த போட்டியில் 27 பந்துகளில் அதிரடியாக 61 ரன்கள் குவித்து அணியில் தனது இருப்பை உறுதி செய்தார்.

அதன்பிறகு தான் விளையாடிய போட்டிகளில் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ரஹானே, கடந்த 23ஆம் தேதி ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 29 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 71 ரன்களை குவித்தார். இதில் 6 பவுண்டரிகளும், 5 சிக்ஸர்களும் அடங்கும்.

அஜிங்க்யா ரஹானேவின் இந்த அசுரத்தனமான ஆட்டத்தைக் கண்ட கொல்கத்தா மைதானமே கொண்டாடி தீர்த்தது. நடப்பு தொடரில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள ரஹானே 199 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 209 ரன்கள் குவித்துள்ளார். இதற்கு முன் ஐபிஎல் சீசனில் ரஹானேவின் சிறந்த ஸ்ட்ரைக் ரேட் 137 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், விமர்சர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் ரஹானேவின் இந்த புத்தெழுச்சியான ஆட்டத்தை புகழ்ந்து வருகின்றனர். இதற்கு காரணம் சிஎஸ்கே அணி கேப்டன் தோனி தான் என்று ஒரு தரப்பும், ரஹானேவின் தன்னம்பிக்கை தான் என்று மற்றொரு தரப்பும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்திய அணியில் மீண்டும் ரஹானே!

இதற்கிடையே தான் வரும் ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெற உள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு பிசிசிஐ வெளியிட்டுள்ள 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி வீரர்கள் பட்டியலில் ரஹானே இடம்பிடித்துள்ளார்.

இதன்மூலம் 15 மாதங்களுக்குப் பிறகு அஜிங்க்யா ரஹானே மீண்டும் இந்திய டெஸ்ட் அணிக்கு திரும்பியுள்ளார். இதனையடுத்து மீண்டும் டிரெண்டிங்கில் வந்துள்ளார் ரஹானே.

ரஹானேவின் ரிட்டர்ன் காரணம்!

இந்த நிலையில் தான் முக்கியத்துவம் வாய்ந்த சாம்பியன்ஷிப் போட்டியில் அவருக்கு இடமளிக்க செய்தது சிஎஸ்கே அணிக்காக விளையாடியுள்ள 5 போட்டிகள் மட்டுமா என்று யோசித்தால் அதற்கு வேறு காரணங்களும் உள்ளன என்பது தெளிவாகும்.

ரஹானேவின் அனுபவமும், அவரது அட்டகாசமான ஃபார்மும் ஒரு பக்கம் என்றால் காயத்தால் விலகியுள்ள இந்திய அணி வீரர்களின் வெற்றிடமும் ரஹானே இடம்பெற்றதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

இளம் வீரர்கள் ரிஷ்ப் பந்த், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோருக்கு ஏற்பட்டுள்ள காயம் அவர்களது இடத்தை வெற்றிடமாக்கியது. அந்த இடத்தில் ஆடக்கூடிய அனுபவம் வாய்ந்த வீரர்களில் ஒருவராக தான் தற்போது ரஹானே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மேலும் ரஞ்சி டிராபியில் 57 சராசரியுடன் விளையாடிய போதும், ஐபிஎல் தொடரில் அவரின் ஸ்ட்ரைக் ரேட் தேர்வாளர்களை அவர் பக்கம் திருப்பியுள்ளது. அத்துடன் சர்ப்ராஸ் கான், மயங்க் அகர்வால் போன்ற மாற்று வீரர்களை விட வெளிநாட்டு ஆடுகளங்களில் சிறந்த ரெகார்ட்டை வைத்துள்ளார் ரஹானே.

இதற்கிடையே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்ய குமார் யாதவ் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் சொதப்பியதும் ரஹானேவின் இடத்தை உறுதி செய்துள்ளன.

எனினும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை மட்டும் மனதில் வைத்து குறுகிய நோக்கத்துடன் ரஹானேவை அணியில் சேர்க்கப்பட்டுள்ளாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

எது எப்படி இருந்தாலும், ஐபிஎல் தொடரில் மீண்டும் விஸ்வரூபமெடுத்துள்ள விண்டேஜ் ரஹானேவை பார்த்து சிஎஸ்கே அணியும், ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். இதே ஆட்டத்தினை மீதமுள்ள ஆட்டங்களிலும் அவர் தொடர்ந்து விளையாடி 5வது முறையாக சிஎஸ்கே கோப்பையை வெல்ல உதவ வேண்டும்.

மேலும் ஜூன் மாதம் நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியிலும் தனது உச்சபட்ச ஆட்டத்தை வெளிபடுத்தி, கடந்த முறை தவறிய கோப்பையை, இந்த முறை இந்திய அணி தங்களது கைகளில் ஏந்த ரஹானே முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

கிறிஸ்டோபர் ஜெமா

”மகனும், மருமகனும் தான் கட்சியே”அண்ணாமலை வெளியிட்ட பிடிஆர் ஆடியோ -2

இந்தியாவின் முதல் வாட்டர் மெட்ரோ: பிரதமர் தொடங்கி வைத்தார்!