மூன்றாம் தரப்பினரின் ஆதிக்கம் அதிகம் இருப்பதால் இந்தியக் கால்பந்து கூட்டமைப்பை தற்காலிகமாக ரத்து செய்வதாக பிஃபா அறிவித்தது. இதையடுத்து மத்திய அரசு சார்பாக இந்த விவகாரத்தை விரைந்து விசாரிக்குமாறு உச்சநீதிமன்றத்தில் இன்று(ஆகஸ்ட்16) கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த விவகாரத்தை அவசர வழக்காக எடுத்து நாளை(ஆகஸ்ட்17) விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றமும் தெரிவித்துள்ளது.
17 வயதிற்கு உட்பட்டோருக்கான பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் நடைபெறுவதாக இருந்தது. வரும் அக்டோபர் மாதம் 11 முதல் 30 ஆம் தேதி வரை இப்போட்டிகள் மும்பை, கோவா, புவனேஷ்வர் ஆகிய 3 நகரங்களில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், பெண்கள் உலகக்கோப்பை போட்டியை இந்தியா நடத்தும் உரிமத்தை ரத்து செய்ததுடன், இந்தியக் கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தையும் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான பிஃபா இன்று(ஆகஸ்ட்16) தற்காலிகமாக ரத்து செய்தது.
பிஃபா-வின் இந்த நடவடிக்கை இந்திய கால்பந்து ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்திய கால்பந்து கூட்டமைப்பு தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வரும் நிலையில் இந்த கூட்டமைப்பின் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் வரும் 28ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில்,மத்திய அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா இன்று (ஆகஸ்ட்16) உச்ச நீதிமன்றத்தில் இந்திய கால்பந்து கூட்டமைப்பை ரத்து செய்துள்ளதாக பிஃபா கடிதம் அனுப்பியுள்ளது என்று கூறினார்.
இதற்கு பதிலளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சந்திரசூட் மற்றும் போபன்னா இந்த வழக்கு நாளை (ஆகஸ்ட் 17) விசாரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்