விபத்தில் இருந்து காப்பாற்றி தன்னை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க உதவிய இருவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ரிஷப் பந்த் முதன்முறையாக ட்விட்டரில் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 30ம் தேதி டெல்லியில் இருந்து ரூர்க்கியில் உள்ள தனது தாயை பார்ப்பதற்காக இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் தனது காரில் சென்றார். அதிகாலை நேரம் என்பதால் அசதி ஏற்பட்ட சிறிது நேரத்தில் டெல்லி – டேராடூன் சாலையில் உள்ள ஒரு தடுப்பில் கார் மோதி விபத்துக்குள்ளானது.
கார் முற்றிலும் தீப்பிடித்து உருகுலைந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக அங்கிருந்தவர்களின் உதவியுடன் ரிஷப் பண்ட் படுகாயங்களுடன் உயிர்தப்பினார். பின்னர் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் டேராடூனில் உள்ள பெரிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
ரிஷப் பண்ட் சந்தேகம்
அங்கு எடுக்கப்பட்ட ஸ்கேனில் அவருக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. பிசிசிஐ பரிந்துரையின் பேரில் மேல்சிகிச்சைக்காக மும்பையில் உள்ள கோகிலாபெண் அம்பானி தனியார் மருத்துவமனைக்கு ரிஷப் பண்ட் அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு எலும்பியல் மருத்துவ நிபுணரான டின்ஷாவின் மேற்பார்வையின் கீழ் முழங்கால் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது.
எனினும் அவர் குணமடைய பல மாதங்கள் ஆகும். எனவே இந்த வருடம் நடக்க இருக்கும் ஐபிஎல், 50 ஓவர் ஆசியக்கோப்பை, 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் மட்டுமின்றி அடுத்தாண்டு நடைபெறும் டி20 உலகக்கோப்பையிலும் ரிஷப் பண்ட் பங்கேற்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில் கார் விபத்தின்போது தனக்கு உதவியவர்களுக்கு நன்றி தெரிவித்து ரிஷப் பண்ட் முதன்முறையாக ட்வீட் செய்துள்ளார்.
இதயப்பூர்வமான நன்றி
அவரது ட்விட்டர் பதிவில், “அனைத்து ஆதரவுக்கும், நல்வாழ்த்துக்களுக்கும் நான் பணிவாகவும் நன்றியுடனும் இருக்கிறேன். எனது அறுவை சிகிச்சை வெற்றியடைந்ததை உங்களுக்கு அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தற்போது மீண்டு வருகிறேன். வரவிருக்கும் சவால்களுக்கும் நான் தயாராக இருக்கிறேன். பிசிசிஐ, ஜெய் ஷா மற்றும் இதர அரசு அதிகாரிகளுக்கும், அவர்களது நம்ப முடியாத ஆதரவிற்கும் நன்றி.
அன்பான வார்த்தைகளுக்காக ரசிகர்கள், சக அணியினர், மருத்துவர்கள் என்று அனைவருக்கும் நான் இதயப்பூர்வமாக நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். உங்கள் அனைவரையும் களத்தில் காண்பதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
நன்றியுடையவனாக இருப்பேன்
மேலும், “அனைவருக்கும் என்னால் தனித்தனியாக நன்றி சொல்ல முடியாமல் போயிருக்கலாம். ஆனால் எனது விபத்தின் போது எனக்கு உதவிய இந்த இரண்டு ஹீரோக்களையும் நான் அங்கீகரிக்க வேண்டும். அவர்களால் தான் நான் பாதுகாப்பாக மருத்துவமனைக்கு வந்தேன். ரஜத் குமார் & நிஷு குமார் இருவருக்கும் நன்றி. உங்களுக்கு நான் என்றென்றும் நன்றியுடையவனாகவும், கடமைப்பட்டவனாகவும் இருப்பேன். என்றுதெரிவித்துள்ளார்.
எனினும் உதவி செய்ததாக கூறப்படும் ரஜத் மற்றும் நிஷு யார் என்பது இன்னும் தெரியவில்லை. முன்னதாக விபத்து நடந்தபின் அங்கு இருந்த பேருந்து ஓட்டுநரான சுஷில் குமார் என்பவர் ரிஷப்பை சரியான நேரத்தில் மருத்துவமனைக்குச் செல்ல உதவினார் என்று செய்திகளில் கூறப்பட்டது.
கிறிஸ்டோபர் ஜெமா
ஒரே நாடு ஒரே தேர்தல் : எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் கடிதம்!
ஜல்லிக்கட்டில் அடுத்தடுத்து உயிரிழப்பு : முதல்வர் நிதியுதவி