இந்த ஆண்டு ஆசிய கோப்பை போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இறுதி போட்டிக்கு அழைத்து செல்லும் முக்கியமான ஆட்டத்தில் இந்திய அணி, இலங்கையை நேற்று எதிர்கொண்டது.
மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் ஆடிய இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 173 ரன்கள் குவித்தது.
தொடர்ந்து ஆடிய இலங்கை அணி அதிரடியாக விளையாடினாலும், கடைசி ஓவர் வரை ஆட்டம் சென்றதால் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பந்து மிஸ் ஆக கடுப்பான பண்ட்!
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தால் கடும் விமர்சனத்துக்கு உள்ளான இளம் வீரர் அர்ஷ்தீப் சிங் தான் கடைசி ஓவரை வீசினார்.
இலங்கை அணிக்கு 6 பந்துகளில் 7 ரன்கள் அடிக்க வேண்டிய நிலைமையில் இருந்தது. அர்ஷ்தீப் கட்டுக்கோப்பாக வீச முதல் 4 பந்துகளில் 5 ரன்களை ஓடியே எடுத்தனர் இலங்கை வீரர்கள்.
இதனையடுத்து 5வது பந்தை கடும் பிரஷர்க்கு இடையே அர்ஷ்தீப் வீசினார். அது இலங்கை கேப்டன் ஷனாகா பேட்டில் படாமல் நேராக விக்கெட் கீப்பர் பண்டிடம் சென்றது. அதற்குள் எதிர்முனையில் இருந்த ராஜபக்ஷ ஓடிவர… பண்ட் தன் கையிலிருந்த பந்தை ஸ்டம்புக்கு எறிந்தார்.
ஆனால் அதில் படாமல் பந்து மிஸ் ஆகி, நேராக நடுபிட்சில் நின்ற அர்ஷ்தீப் கையில் சென்றது. அவரும் தன் பங்கிற்கு எதிர் திசையில் ஓடிய ஷனாகவை ரன் அவுட் ஆக்க ஸ்டம்புக்கு எறிந்தார். ஆனால் பந்து ஸ்டம்பில் படாமல் ஓவர் த்ரோ ஆன நிலையில், இருவரும் மேலும் ஒரு ரன் ஓடி இலங்கையின் வெற்றியை உறுதி செய்தனர்.
ஓவர் த்ரோ..? ஓவர் கான்பிடன்ஸ்..?
இதற்கெல்லாம் காரணமாக அமைந்தது. இரு வீரர்களின் பதட்டமான செயல் தான். இருவரும் கொஞ்சம் நிதானமாக செயல்பட்டிருந்தால் ஆட்டத்தின் ரிசல்ட் வேறு மாதிரி வந்திருக்கலாம்.
ஆனால் பதட்டத்துடன் செயல்பட்டதால் இலங்கை அணி வெற்றி பெற்றது மட்டுமின்றி இந்திய அணியின் ஆசிய கோப்பை கனவும் கலைந்து போயுள்ளது. இதனையடுத்து சமூகவலைதளங்களில் இந்தியா இலங்கை ஆட்டம் குறித்து ரசிகர்கள் விமர்சனங்கள் #INDvsSL என்ற ஹேஷ்டேக் டிரெண்டானது.
ஆனால் அதையெல்லாம் முறியடித்து டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது #Dhoni யின் ஹேஷ்டேக் தான்.
ஓய்வு பெற்றாலும் டிரெண்டிங்கில் தோனி!
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெற்றது முதல் சமீபகாலமாக இந்தியா விளையாடும் ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் தோனியின் பெயர் ட்ரெண்டிங்கில் வருவது வாடிக்கையாகி உள்ளது.
ஆசியக்கோப்பை லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக ஹர்திக் விளையாடிய விதம், வெளிப்படுத்திய உடல்மொழி எல்லாம் தோனியை ஞாபகப்படுத்த, அப்போதும் டிரெண்டிங்கில் வந்தார் கூல் தோனி.
அதேபோல் நேற்று கடைசி ஓவரில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் செய்த த்ரோவும் கிட்டத்தட்ட தோனியை ஞாபகப்படுத்தியது. ஆனால் பண்டின் முயற்சி தோல்வியில் முடியவும், ’என்ன தான் இருந்தாலும் தல போல வருமா’ என்று தோனியின் அபாரமான மின்னல் வேக ஸ்டம்பிங் நோஸ்டால்ஜியாவுக்குள் நுழைந்தனர் அவரது ரசிகர்கள்.
எவ்வளவு இக்கட்டான சூழ்நிலையிலும் கூலாக இருக்கும் தோனி ஆட்டத்தின் கடைசி பந்து வரை சென்று இந்திய அணிக்கு பல வெற்றிகளை தேடி தந்துள்ளார். தோனி எப்படி கிரிக்கெட் உலகின் சிறந்த பினிஷராக அறியப்படுகிறாரோ, அதே போல் அவரது மின்னல் வேக ஸ்டம்பிங்கிற்கும் சிறந்த எடுத்துக்காட்டு.
அதிலும் கடந்த 2016ம் ஆண்டு நடந்த வங்கதேசத்துக்கு எதிரான உலகப்கோப்பை போட்டியின் கடைசி ஓவரும், நேற்று இலங்கைக்கு எதிராக இந்திய அணி எதிர்கொண்ட கடைசி ஓவரின் சூழலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவை தான்.
மறக்கமுடியாத வங்கதேச போட்டி!
தோனியின் கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த கிரிக்கெட் ஸ்டம்பிங் என்றாலே கடந்த 2016ம் ஆண்டு நடந்த டி20 உலககோப்பையில் வங்கதேசத்துடனான போட்டி நினைவுக்கு வந்துவிடும்.
பெங்களூருவில் நடைபெற்ற அந்த போட்டியில் கடைசி ஓவரை ஹர்திக் பாண்டியா வீசுவார். கடைசி 1 பந்தில் வங்கதேச அணி 1 ரன் எடுத்தால் டிரா. 2 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலை.
இதனையடுத்து கடும் நெருக்கடிக்கு இடையே பாண்டியா அதனை வீசுவதற்கு முன்னதாக தோனி தனது வலது கையின் விக்கெட் கீப்பிங் கிளவுஸை கழட்டி தயாராக இருப்பார். ஆப் சைடாக வீசப்பட்ட பந்தை ஸ்டிரைக்கில் இருந்த பந்தை ஷுவகத ஹோம் மிஸ் செய்ய, அது நேராக தோனியின் கையில் சேர்ந்திருக்கும்.
இதற்கிடையே மறு முனையில் இருந்து முஸ்தாபிசூர் ரஹ்மான் ரன் எடுக்க ஓடி வருவார். அதேநேரத்தில் இதனை முன் கூட்டியே கணித்திருந்த தோனி, கண் இமைக்கும் நேரத்தில் ஓடி வந்து ஸ்டம்பை தகர்த்திருப்பார். இதன் மூலம் ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றிருக்கும்.
தற்போது இந்த இரண்டு போட்டிகளையும் குறிப்பிட்டு தான் சமூகவலைதளங்களில் ரசிகர்கள் தோனியை புகழ்ந்து வருகின்றனர்.
அன்றைய போட்டியில் தோனிக்கும், நேற்றைய போட்டியில் பண்டுக்கும் இடையே இருக்கும் இடைவெளி வெற்றி மட்டும் தான்.
ஆனால் கொஞ்சம் உற்றுநோக்கி கவனித்தால், அந்த விக்கெட்டுக்கு முன்னால் தோனியின் நுணுக்கமான ஆட்ட திறமையும், முன்கூட்டியே கணிக்கும் திறமையும், பதட்டமில்லாத உடல்மொழியும் தெரியும்.
இதனால் தான் தோனி ஓய்வு பெற்றாலும் ரசிகர்களின் மனதில் ஒய்யாரத்தில் இருப்பதற்கு காரணம்.
கிறிஸ்டோபர் ஜெமா