கிரிக்கெட்டில் பயங்கரவாதமா? பாகிஸ்தான் வீரருக்கு தடை கேட்கும் ஆப்கன்

விளையாட்டு

ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளரை பேட்டின் மூலம் மிரட்டிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆசிப் அலிக்கு தடை விதிக்க வேண்டும் என ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பலரும் ஐசிசிக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேற்று (செப்டம்பர் 8) ஷார்ஜா மைதானத்தில் எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 129 ரன்களை மட்டுமே அடித்தது. எனினும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட ஆப்கானிஸ்தான் அணி 19 ஓவரில் 9 விக்கெட்டுகளை கைப்பற்றியது.

கைவசம் ஒரு விக்கெட் மட்டுமே இருந்த நிலையில் கடைசி ஓவரில் பாகிஸ்தான் அணிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டதால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றியது. களத்தில் நஷீம் ஷா மற்றும் முகமது ஹஸ்னைன் ஆகியோர் இருந்தனர். கடைசி ஓவரை ஆப்கானிஸ்தான் அணியின் ஃபசல்ஹக் ஃபரூக்கி வீசினார். சிறப்பாக வீசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் இரண்டு பந்துகளையும் புல்டாசாக வீச, அந்த பந்துகளை எதிர்கொண்ட நசீம் ஷா சிக்சர்களாக மாற்றி அசத்தினார். இதனால் பாகிஸ்தான் அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் திரில்லிங்காக வெற்றி பெற்றது. மேலும், இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதால் ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்கும் பாகிஸ்தான் முன்னேறி உள்ளது.

மைதானத்தில் சூடு கிளப்பிய மோதல்!

அதே வேளையில் இந்த வெற்றியை கடந்து ஆப்கானிஸ்தான் வீரர் அகமது மாலிக், பாகிஸ்தான் வீரர் ஆசிப் அலிக் ஆகியோருக்கு இடையே நடந்த ஆக்ரோஷமான மோதல் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 19வது ஓவரில் ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் அகமது மாலிக் வீசிய பந்தை சிக்சருக்கு விளாசிய ஆசிப் அலி, அடுத்த பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். அப்போது இருவருக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட, ஆசிப் அலி திடீரென அகமது மாலிக்கை பேட்டால் அடிக்க சென்றார். உடனடியாக மைதானத்தில் இருந்த ஆப்கானிஸ்தான் வீரர்கள் மற்றும் கள நடுவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இருப்பினும், இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

ஆசிப் அலியை தடை செய்ய கோரும் ஆப்கன் தலைவர்கள்!

அதில், போட்டி விதிமுறைக்கு மாறாக களத்தில் நடந்து கொண்ட ஆசிப் அலிக்கு கடுமையாக தண்டனை வழங்க வேண்டும் என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் ஐசிசிக்கு வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக ஆப்கானிஸ்தான் அரசில் உயர்பொறுப்பில் இருப்பவர்கள் பலரும் ஆசிப் அலிக்கு தடைவிதிக்க வேண்டும் என்று ட்விட்டரில் #BanAsifAli ஹேஸ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் அஃப்தாப் ஆலம், “ஆசிப் அலி தொடர்ந்து இது போன்று களத்தில் அத்துமீறி வருவதாகவும், தற்போது ஆப்கானுக்கு எதிராக இரண்டாம் முறையாக இவ்வாறு நடந்துள்ளார். அவரை தடை செய்யவேண்டும்” என்று தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் முன்னாள் மத விவகார இயக்குநரான ஆண்டார் தனது ட்விட்டர் பதிவில், வன்முறை மற்றும் அச்சுறுத்தும் நடத்தைக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை ஐசிசி ஒழுங்குபடுத்த வேண்டும். பாகிஸ்தான் வீரர்களின் நடத்தையை நான் கடுமையாக எதிர்க்கிறேன். கிரிக்கெட்டில் பயங்கரவாதத்தை கொண்டு வரக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதே போன்று ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், அந்நாட்டு தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் பாகிஸ்தான் வீரர் ஆசிப் அலியின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.மேலும் அவரை கிரிக்கெட் போட்டியில் இருந்து தடை செய்ய வேண்டும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதேநேரத்தில், ஆசிப் அலிக்கு கோபத்தை மூட்டிய ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளருக்கும் தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்று ஒரு தரப்பினரும், ஆசிப் அலி மற்றும் ஃபரீத் அகமது மாலிக்கின் சண்டை பற்றியே எல்லோரும் ஏன் பேசுகிறார்கள்? ஒரு கணத்தில் நடந்து முடிந்த மோதல். ரஷீத்துக்கும், ஹரிஸுக்கும் இடையில் மற்றொரு அன்பான, சகோதரத்துவமிக்க தருணம் இருந்தது. அதை பாருங்கள் என்று மற்றொரு தரப்பினரும் கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர்.

கிறிஸ்டோபர் ஜெமா

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.